ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்திற்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்க பரிசீலிக்கப்படும் – பேராசிரியர்.

Admin

பிறை – ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயமும் மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்றமும் இணைந்து இரண்டாவது ஆண்டாக பொங்கல் கொண்டாட்டத்தை அவ்வாலய வளாகத்தில் இனிதே ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர் மேஜர் சேகர், மலேசிய பினாங்கு இந்துதர்ம மாமன்ற தலைவர் தர்மசிகாமணி நந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பொங்கல் கொண்டாட்டத்தை மெருகேற்றும் வகையில் கரும்புகளை பிரமிட் வடிவில் அமைத்து வண்ண கோலமிட்டு சிறப்பாக வழிநடத்தினர். மேலும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான உரி அடித்தல், கூந்தல் பின்னுதல், கோலம் போடுதல் மற்றும் மாட்டு வண்டிகளை வடிவமைக்கும் போட்டியும் இந்நிகழ்வில் இடம்பெற்றது. அழகாக வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டிகள் வீதியில் உலா வந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே, டாமாய் உடல் ஊனமுற்றோர் கழகத்தில் இருந்து 12 உடல் ஊனமுற்றோர்கள் இப்பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் உடல் ஊனமுற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்கென பிரத்தியேகமாக மூன்று சக்கர நாற்காலி பயணிக்கும் பாதையை பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார். மேலும், உடல் ஊனமுற்றோருக்கு வசதிகள் பொருந்திய கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும். தொடர்ந்து, டாமாய் உடல் ஊனமுற்றோர் கழகத்திற்கு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயம் உதவிக்கரம் நீட்ட மாதிரி காசோலை எடுத்து வழங்கியது சாலச்சிறந்தது.

மேலும், நிகழ்வில் சிறப்புரை வழங்கிய பிறை சட்டமன்ற உறுப்பினருமான ப.இராமசாமி, ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்திற்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க அருகில் இருக்கும் நிலத்திற்கு விண்ணப்பிக்க கோரி கடிதம் எழுத வலியுறுத்தினார். முறையான ஆவணங்கள் பெற்ற பின்னர் அங்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்க மாநில அரசு பரிசீலிக்கும் என பேராசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொங்கல் கொண்டாடத்தில் நடைபெற்ற அனைத்து போட்டியின் வெற்றியாளர்களுக்கும் ஏற்பாட்டு குழுவினர் கேடயமும் ரொக்கப்பணமும் எடுத்து வழங்கினர்.