‘ஸ்தெம்’ கல்வி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வித்திடும்

ஜார்ச்டவுன் – மாநில அரசு  ‘ஸ்தெம்’ எனும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கல்வியை மாணவர்களிடையே வலியுறுத்தும் பொருட்டு பல திட்டங்கள் வகுத்து வருகிறது.

அண்மையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் ஏற்பாட்டில் ‘கணித ஊக்குவிப்புத் திட்டம்’ மின்னியல் நூல்நிலையத்தில் இனிதே நடைபெற்றது.

இத்திட்டத்தில் ஜாலான் சுங்கை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 50 மாணவர்கள் கடந்த பிப்ரவரி, 23-ஆம் நாள் இடம்பெற்ற இவ்வகுப்பில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

“ஸ்தெம் கல்வியை மாணவர்களுக்குப் புகட்டும் நோக்கத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தொடக்கமாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும்,” என நேதாஜி இராயர் தெரிவித்தார்.

‘என்னால் கணிதம் செய்ய முடியும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஊக்குவிப்புத் திட்டம் நடத்தப்பட்டது.