ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

பட்டர்வொர்த் – சக்தியை நோக்கி அனுசரிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் திகழ்கிறது.

நவராத்திரி கொண்டாட்டம் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது.

பட்டர்வொர்த், அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா பண்பாட்டு மற்றும் சமயக் கூறுகளுடன் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் நவராத்திரி கொண்டாட்டத்தில் துர்கையம்மன், சரஸ்வதி மற்றும் மகாலெட்சுமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் ஏற்று நடத்தப்படுகின்றன.

முதல் மூன்று தினங்களும் வீரத்தை வேண்டி துர்க்கையினையும் அடுத்த மூன்று தினங்களும் செல்வத்தை வேண்டி மஹாலக்ஷ்மி அன்னையும் இறுதி மூன்று தினங்களும் கல்வியை வேண்டி சரஸ்வதியும் வழிபடுவார்கள்.

 

துர்கையின் வடிவமாக அம்பாளின் சிறப்பு அலங்காரம்.

இவ்வாறு விரதம் அனுஸ்டித்து மூன்று சக்திகளையும் வழிபடுவதனால் வீரம், கல்வி, செல்வம் என்பன வாழ்வில் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

பத்து நாட்களுக்கு அனுசரிக்கப்படும் இவ்விழாவில் பக்தர்களும் பொது மக்களும் வருகை அளித்து அம்பாளின் ஆசியப் பெறுகின்றனர்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இயங்கும் பட்டர்வொர்த், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நவராத்திரி விழாக் கொண்டாட்டம் ஆலயத் தலைவர் சஞ்ஜிலாதிபன் தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது.

அதே வேளையில் சிறப்பு பூஜைகளுடன், பக்தி பாடல்கள், பரத நாட்டியம் போன்ற முக்கிய பாரம்பரிய அம்சங்களுடன் நவராத்திரி கொண்டாட்டம் மிக விமரிசையாகக் காணப்படுவதை முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காணப்பட்டது.

ஆலயத் தலைவர் மற்றும் ஆலயத் தொண்டர் குழுவின் சிறந்த ஏற்பாட்டில் நவராத்திரி கொலுவுடன் நவராத்திரி கொண்டாட்டம் இடம்பெற்றது.

ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.

நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதேயாகும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட்டு வளமான வாழ்வினைப் பெறுவோம்.