11,200 உரிமம் பெற்ற வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளுக்கு பெர்மிட் கட்டணம் மற்றும் வளாக வாடகை விலக்கு – ஜெக்டிப்

Admin

தஞ்சோங் பூங்கா – பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 11,200 உரிமம் பெற்ற சிறு வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் மாதம்  வரை மூன்று மாதங்களுக்கு ‘பெர்மிட்’ மற்றும் வளாகம் வாடகையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பினாங்கு மாநகர் கழகம் மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம்  ஆகிய இரு ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வணிக வளாகங்களுக்கு வாடகை விலக்கு அளிக்கப்படுகிறது
என வீட்டுவசதி, உள்ளூராட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ
கூறினார்.

இத்திட்டத்திற்காக இரு ஊராட்சி மன்றங்களும் சுமார் ரிம5.12 மில்லியன் நிதி சுமையை ஏற்றுக்கொள்கிறது என்று அவர் விளக்கமளித்தார்.

“கோவிட்-19 தொற்றுநோயால் பொருளாதாரத் துறைகள் மூடக்கம் கண்டதால் இம்மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“எனவே, 2021 செப்டம்பர்,15 முதல் தேசிய மீட்சித் திட்டத்தின் (பி.பி.என்) கீழ் ஊராட்சி மன்றங்களின் வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு  ஊக்கத்தொகை திட்டங்கள் மாநில அரசு அங்கீகரித்துள்ளது.

“இம்மாநிலத்தில்  வாடகை  விலக்கு அளிக்கப்படுவதால், மாநிலத்தில் உள்ள இரு  ஊராட்சி மன்றங்களில் பதிவுசெய்யப்பட்ட சுமார் 11,200 வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகள் பயனடைவார்கள்,” என்று தஞ்சோங் பூங்கா சந்தை மற்றும் வளாகம் அருகே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெக்டிப் இவ்வாறு கூறினார்.

மேலும், எம்.பி.பி.பி செயலாளர், டத்தோ அட்னன் முகமட் ரசாலி மற்றும் உள்ளூர் அரசாங்கப் பிரிவின் முதன்மை மூத்த உதவிச் செயலாளர், நூர் ஆயிஷா முகமட் நோரோடின் ஆகியோர் இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினருமான ஜெக்டிப், வளாகத்திற்கான வாடகை கட்டணம் தவிர, மாநில அரசு இரவுச் சந்தை, காலை சந்தை, வாரச் சந்தை மற்றும் உழவர் சந்தை ஏற்பாட்டு குழுவினருக்கு ஓர் ஆண்டு காலத்திற்கான பெர்மிட் கட்டண விலக்கு அளித்துள்ளதை அறிவித்தார்.

கடந்த ஆண்டு,  மாநில அரசு பல்வேறு உதவித் திட்டங்களைச் செயல்படுத்தியது, குறிப்பாக இம்மாநிலத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் பல உதவித் திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.

உரிமம் பெற்ற சிறு வியாபாரிகள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு ரிம500 நிதியுதவி (ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்); முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பா, ‘ரிஃப்ளெக்சாலஜி’ மையம் மற்றும் ‘பேகம்’ சேவைகளுக்கு நிதியுதவியாக ரிம500 (ஒரு முறை மட்டுமே வழங்குதல்) என  ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

அது தவிர, மாநில அரசு  ஊராட்சி மன்றங்கள்  வணிக வளாகங்களுக்கு வாடகை விலக்கு அளித்தல் மற்றும் 2020 & 2021-க்கான மதிப்பீட்டு வரி தள்ளுபடிகள் மற்றும் பல சலுகைகள் வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.