17 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பின் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டிடம்

fb img 1789101299602

சுங்கை பாக்காப் – புதிய பள்ளிக் கட்டிடம் வேண்டும் என்ற சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிச் சமூகத்தின் 17 ஆண்டுகால நீண்டகாலக் கனவு, தற்போது நனவாகியுள்ளது.ரிம12.6 மில்லியன் மதிப்பிலான புதிய பள்ளிக் கட்டுமானத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், அப்பகுதியில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

2009ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இப்பிரச்சனைக்குத் தீர்வு காண பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயனாக இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது ஒரு முக்கியமான சாதனையாகும் என்று வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக் குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.

fb img 1789005173306

புதிய பள்ளிக் கட்டிடத்தின் கட்டுமானம், தமிழ்ப்பள்ளியின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழ்க் கல்வியின் எதிர்காலத்தைத் தொடர்ந்து வலுப்படுத்துவதில் அரசாங்கத்தின் நிலையான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

fb img 1789005170784

மேலும், மாநில தமிழ்ப்பள்ளிகள் சிறப்புக் குழுவின் மூலம் இந்த ஆண்டு பினாங்கில் மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கான புதிய கட்டிடங்களை அமைக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அவற்றில் ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளியும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

fb img 1789005178190

“மடானி அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு தேசிய வகைத் தமிழ்ப்பள்ளியும் மூடப்படாது. மாறாக, அப்பள்ளிகளின் வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் நலனை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தும்,” என்று கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் உறுதியளித்தார்.

fb img 1789005119600

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியில் பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான மற்றும் கல்விக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதில் புதிய பள்ளிக் கட்டிடத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் கூறினார்.
fb img 1789101214550
யாயாசான் டிடிக் நெகாரா (YDN) உடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டம், பினாங்கு மாநிலக் கல்வித் துறையின் கண்காணிப்பில் 56 வாரங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய பள்ளி அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கட்டப்படவுள்ள புதிய பள்ளி வளாகத்தில் ஆறு வகுப்பறைகள், சிறப்பு அறைகள் மற்றும் பல்வேறு துணை வசதிகள் இடம்பெறும்.

இந்நிகழ்ச்சியில் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன்,பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். இராயர், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பின்னர், சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு இத்திட்டம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு குழுவின் துணைத் தலைவருமான குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

புதிய பள்ளிக் கட்டிடத்தின் கட்டுமானம், நீண்டகாலமாக நிலவி வந்த உள்கட்டமைப்புப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுடன், சுங்கை பாக்காப் பகுதியின் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்கான முக்கிய முதலீடாகவும் அமையும் என்று அவர் கூறினார்.

இத்திட்டம் செயல்படுத்துவதில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை, நிலம் தொடர்பான பிரச்சனைகள், ஒப்பந்ததாரர்களின் தாமதங்கள் மற்றும் சட்டரீதியான தகராறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 17 ஆண்டுகளாகத் தாமதமடைந்து வந்ததாக அவர் விளக்கமளித்தார்.

“இனிவரும் 56 வாரங்களுக்குள் சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணிகளை முடித்து, புதிய பள்ளிக் கட்டிடத்தை முழுமையாக நிறைவு செய்வதை உறுதி செய்வதற்காக ரிம12.6 மில்லியனை ஒதுக்கியுள்ள மத்திய அரசாங்கத்திற்கு, இந்திய சமூகத்தின் சார்பில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டம், அனைத்து இன மக்களின் கல்வி நலன்களுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதில் மடானி அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் குமரன் தெரிவித்தார்.