2018 முதல் இராமதாசர் தமிழ்ப்பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரிம400,000 ஒதுக்கீடு – இராயர்

Admin
img 20260612 wa0041

 

சுங்கை பினாங்கு – ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், 2018 ஆம் ஆண்டு முதல் இராமதாசர் தமிழ்ப்பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்காக கிட்டத்தட்ட ரிம400,000 நிதி ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அவரின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில் பள்ளியின் சுவர் மற்றும் வேலியை மேம்படுத்தும் பணிகளுக்காக ரிம89,400 மற்றும் 32 கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துவதற்காக ரிம49,890 செலவிடப்பட்டது.

“அதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் பள்ளிக் கட்டிடத்தை சாயம் பூசும் பணிகளுக்கும் தொடர்புடைய பணிகளுக்கும் ரிம48,820 ஒதுக்கப்பட்டது. மேலும், 2023 ஆம் ஆண்டில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ICT) அறை பராமரிப்புப் பணிகளுக்காக ரிம28,450 செலவிடப்பட்டது.

“கடந்த ஆண்டு பள்ளிக்கான நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகள் அமைக்கும் பணிகளுக்காக ரிம85,000 செலவிடப்பட்டது. இந்த ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கில e-Card வழங்க ரிம5,000 மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக ரிம85,000 ஒதுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

இன்று நடைபெற்ற இராமதாசர் தமிழ்ப்பள்ளியின் புதிய நுழைவு மற்றும் வெளியேறும் பாதை திறப்பு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினருமான லிம் சியூ கிம், செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஷ்வரன், பள்ளித் தலைமையாசிரியர் டி. வினோத், பினாங்கு மாநிலக் கல்வித் துறையின் பாலர் மற்றும் தொடக்கக் கல்விப் பிரிவு உதவி இயக்குநர் எம். கார்த்திக், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அனிலன், பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் டத்தோ கே.பி.எஸ். முருகையா மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் என். செல்வராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களின் பள்ளி பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த உதவும் நிதியுதவியை அடுத்த ஆண்டு முதல் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இராயர் தெரிவித்தார்.

“பள்ளிப் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் சிரமப்படும் மாணவர்கள் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனவே, பள்ளி நிர்வாகம் எனக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் வழங்கினால், இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டிற்கான பேருந்துக் கட்டண உதவியை வழங்க நான் தயாராக இருக்கிறேன்,” என்றார்.

மேலும், இராமதாசர் தமிழ்ப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகள் உட்பட தேசிய வகை பள்ளிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதை நிரூபிப்பதாக இராயர் குறிப்பிட்டார்.

“அரசாங்கத்தின் உதவிகளும் நிதி ஒதுக்கீடுகளும் தேசியப் பள்ளிகளுக்கு மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் உள்ள தேசிய வகை பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

“எனவே, ஒற்றுமை அரசாங்கம் தேசிய வகை பள்ளிகளைப் புறக்கணிக்கிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை,” என்றார்.

அனைத்து மாணவர்களின் நலனும் வசதிகளும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய கல்வித் துறையை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாடு தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, லிம் சியூ கிம் தனது உரையில் பினாங்கில் கல்வி வளர்ச்சிக்காக பங்களித்து வரும் ஒற்றுமை அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், பினாங்கு அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுவின் மூலம் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு வழங்கி வருவதாகக் கூறினார்.

“தமிழ்ப்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் கொண்ட பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குக் கல்வியில் கூடுதல் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது.

“உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டுமல்லாமல், போக்குவரத்து மற்றும் உணவு உதவி மற்றும் கல்வித் திறனை மேம்படுத்தும் பல்வேறு கல்வித் திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன,” என்றார்.