2020-மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு திட்டம் இ-சென்சஸ் & நேரடியாக மேற்கொள்ளப்படும்- முதல்வர்

Admin

ஜார்ச்டவுன் – மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ், மலேசிய புள்ளி விவரத் துறையின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது உசீர் மயிடின் உடன் இணைந்து பினாங்கு மாநில அளவிலான 2020- மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக இ-சென்சஸ் இணைய பக்கம் வாயிலாக (https://www.mycensus.gov.my/) ஜூலை, 7 முதல் செப்டம்பர், 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும். அதே வேளையில் இரண்டாம் கட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் 7 முதல் 24 வரை நேரடி நேர்காணல் வாயிலாக கணக்கெடுப்பு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

எனவே, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் உட்பட 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பங்கு பெறுவர் என நம்புக்கைத் தெரிவித்தார்.

“இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின் முடிவுகள் மாநில மற்றும் தேசிய அளவிலான மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஓர் அடித்தளமாகத் திகழ்கிறது.

“இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட புள்ளிவிவரத் தரவுகள் எதிர்காலத்தில் மக்களின் நலனுக்காக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் செயல்படுத்த பயன்படுத்தப்படும்,” என்று கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு விளக்கமளித்தார்.

மாநில முதலாம் துணை முதல்வர் டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான், ஆட்சிக்குழு உறுப்பினர்கள்; மாநில செயலாளர் டத்தோ அப்துல் ரசாக் ஜாஃபர் மற்றும் மாநில புள்ளி விவரத் துறையின் தலைவர் மொஹமட் சுஹைமி மொஹமட் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய மொஹமட் உசீர், பினாங்கில் மொத்த இயற்கை வளர்ச்சி விகிதம் (சி.ஆர்.என்.ஐ) 5.4 என்றும்; மொத்த பிறப்பு விகிதம் (சி.பி.ஆர்) 11.7 மற்றும் மொத்த இறப்பு விகிதம் (சி.டி.ஆர்) 6.4 என விளக்கமளித்தார்.

இருப்பினும், பிற மாநிலங்களான சபா (1.4), கோலாலம்பூர் (1.5), சரவாக் (1.6) மற்றும் சிலாங்கூர் (1.7) போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இம்மாநிலத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் (டி.எஃப்.ஆர்) 1.3 மிகக் குறைவான நிலையில் தான் இருக்கிறது.

“இந்த புள்ளிவிபரம்(1.3) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அவரவர் பெற்றோர்களின் எண்ணிக்கைக்கு ஈடுக்கட்ட முடியாது என குறிப்பிடுகிறது.

“இதனால் பினாங்கு மாநிலத்தில் எதிர்காலத்தில் வேலை உற்பத்தி பிரச்சனை மற்றும் சமூக பிரச்சனைகள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். மேலும் வேலை செய்வோர் நீண்ட ஆயுள்கொண்ட 70-72 வயது நிரம்பிய வயோதிகளுக்கும் சேர்த்து வேலை செய்யும் சூழல் ஏற்படும்.
“வயோதிகள் உற்பத்தி திறன் அற்றவர்கள் என்ற பிரிவில் சேர்க்கப்படுவர், ஏனெனில் அவர்களால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியாது. இதனால் வரி செலுத்துனரின் விகிதம் அதிகரிக்கும்,” என கூறினார்.

பினாங்கு மாநில அளவிலான மக்கள் தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பு திட்டமானது இம்மாநிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு மக்களையும் உட்படுத்தும் என்று முகமது உசீர் கூறினார்.

“மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரியின் அடிப்படையில் செய்யப்படவில்லை, மாறாக ஒவ்வொருவரிடமும் இந்த கணக்கெடுப்பு எடுக்கப்படும். இதன் மூலம், பொது மக்கள் அவரவர் தேவையைப் பட்டியலிட ஏதுவாக இருக்கும். இந்த கணக்கெடுப்பில் மலேசியாவில் 6 மாதத்திற்கு மேல் தங்கியிருக்கும் அந்நிய தொழிலாளர்களிடமும் எடுக்கப்படும்.

“கணக்கெடுப்பாளராகப் பணிப்புரிய ஆர்வமுள்ளோர் https://www.mycensus.gov.my/ எனும் அகப்பக்கத்தை வலம் வரவும்.
மேலும் கருத்து தெரிவித்த மொஹமட் சுஹாய்மி, பினாங்கு மாநில அளவிலான மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு திட்டத்தை செயல்படுத்த சுமார் 1.8 மில்லியன் மக்கள் மீது கணக்கெடுப்பு எடுக்கப்படும். இத்திட்டத்தில் 5,881 கணக்கெடுப்பளார்கள் மற்றும் 812 மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்ட மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகிறது என்றார்.

இறுதியாக, இந்த கணக்கெடுப்புத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக (2010) நடத்தப்பட்டது.