2025 எஸ்.டி.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற 26 மாணவர்களுக்கு அங்கீகாரம்

Admin
img 20260715 wa0045

ஜார்ச்டவுன் – பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 2025 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம் (STPM) தேர்வில் 3.50 மற்றும் அதற்கு மேற்பட்ட CGPA பெற்ற 26 சிறந்த மாணவர்களை கொம்தார் ‘சி’ அரங்கில் கௌரவித்தது.
img 20260715 wa0047

அவர்களில் ஏழு மாணவர்கள் முழுமையான 4.00 CGPA பெற்று சிறப்பான சாதனை படைத்ததற்காக சிறந்த மாணவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியினை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர், மாண்புமிகு லிம் ஹூய் இங் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான ஆர்.எஸ்.என் இராயர் மற்றும் எம்.பி.பி.பி கவுன்சிலருமான விஸ்வநாதன் தங்கவேலு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

img 20260715 wa0046

கல்வியே சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் இளம் தலைமுறையின் எதிர்காலத்திற்கும் அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கல்வித் துறைக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருவதாக அதன் தலைவர் ஆர்.எஸ்.என். இராயர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், வாரியத்தின் நிதியில் பெரும்பகுதி கல்வி மற்றும் சமூகநலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு வருவதுடன், மேலும் பல மாணவர்கள் உயர்கல்வியில் முன்னேற தேவையான உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வி நிலையங்களில் கல்விப் பயில வாய்ப்புக் கிடைத்த 44 மாணவர்களுக்கு மொத்தம் ரிம40,800 நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த உதவி, அவர்களின் கல்விச் செலவினை குறைத்து, உயர்கல்வியைத் தொடர்ந்து மேற்கொள்ள உறுதுணையாக அமையும் என பினாங்கு இந்து அறப்பணி வாரியத் துணை தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார். இந்த உதவித் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது பாராட்டக்குரியதாகும்.

1906ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பினாங்கு இந்து அறப்பணி வாரியம், மலேசியாவில் செயல்பட்டு வரும் ஒரே இந்து அறப்பணி வாரியமாகும். கல்வி மேம்பாட்டிற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் இந்த வாரியம், இந்து கோவில்கள், அறப்பணி வாரியச் சொத்துகள் மற்றும் சமய நிறுவனங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெற்று விருதுகள் மற்றும் கல்வி உதவித்தொகைகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் துணை அமைச்சர் லிம் ஹுய் இங் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாணவர்களின் இந்தச் சாதனை, மேலும் பல இளைஞர்களை கல்வியில் சிறந்து விளங்கி சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்களிக்க ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வெளிப்படுத்தியது.