2030-க்குள் 220,000 யூனிட் மலிவு வீடுகள் கட்ட இலக்கு – ஜெக்டிப்

சுங்கை பினாங்கு – வீடமைப்பு, உள்ளாட்சி, நகர்ப்புற & கிராமப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ, 2030-ஆம் ஆண்டுக்குள் 220,000 வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் (ஆர்.எம்.எம்) தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் தேவைக்கு ஏற்ப அமைக்க புதிய இலக்கை நிர்ணயித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த இலக்கில் குறைந்த விலை வீடுகள் (ஆர்.எம்.எம் ஏ) மற்றும் நடுத்தர குறைந்த விலை வீடுகள் (ஆர்.எம்.எம் பி) மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் ஆர்.எம்.எம் சி1 (அதிகபட்ச விலை ரிம150,000), சி2 (ரிம200,000) மற்றும் சி3 (ரிம300,000) ஆகிய மூன்று விலைகளில் விற்கப்படும்.

இந்த புதிய இலக்கு கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த 2030-க்குள் 180,000 குறைந்த விலை வீடுகள் அமைக்கப்பதற்கான
இலக்கிலிருந்து 20 விழுக்காடு அதிகரிக்கப்படுகின்றன.

“இந்த புதிய இலக்கு பொருளாதார நிலையற்ற தன்மையின் தாக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. கோவிட்-19 தொற்றுநோய் நமது பொருளாதாரத்தை பாதிப்பதோடு, சவால் மிக்க சூழலை உருவாக்குகிறது. இப்புதிய இலக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

“கோவிட்-19 விளைவாக தற்போது சவால் மிக்க சூழலை பொது மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே, கட்டப்பட்ட வீடுகளுக்கு நூற்றுக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான ரிங்கிட் கொடுத்து யார் வாங்கக்கூடியவர்கள்? ஏனெனில், அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதற்கும் இன்னும் சாப்பிடக்கூட பணம் கணக்கிட வேண்டிய சூழலில் சிலர் வாழ்கின்றனர்.

“உண்மையில், மலிவு விலை வீடுகளின் விநியோகம் அதிகரிக்க பினாங்கில் வளர்ச்சி மிகவும் அவசியம், அத்துடன் மக்களின் நலன் பராமரிக்கப்படுவது அவசியமாகிறது.
“எனவே, 2030-க்குள் இன்னும் 10 ஆண்டுகள் உள்ளன.மாநில அரசு ஆர்.எம்.எம் தேவை எப்போதுமே இருக்கும் என நம்புகிறோம்.எனவே 2030-ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தில் கட்டப்படவுள்ள மொத்த ஆர்.எம்.எம் 220,000 ஆக இருக்க புதிய இலக்கை நிர்ணயித்துள்ளேன்,” என்று ஜெலுத்தோங் அருகே ஆர்தே3 அடுக்குமாடி குடியிருப்பின் மலிவுவிலை வீட்டு உரிமையாளர்களுக்கு பணி கடிதம் வழங்கும் விழாவில் ஜெக்டிப் இவ்வாறு தெளிவுப்படுத்தினார்.

இந்நிகழ்வில் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சீயூ கிம் மற்றும் மாநில செயலாளர் அலுவலகத்தின் வீட்டுவசதி பிரிவின் மூத்த உதவி செயலாளர் (வீட்டுவசதி) அய்நுல் படிலா சம்சூடி ஆகியோர் கலந்து கொண்டனர்

டுட்டா மாஸ் (ஏர் மாஸ் குழு) மேம்பாட்டு நிறுவனத்தால் கட்டப்பட்ட இத்திட்டத்தில்
(ஆர்ட்டி 3) 158 வாங்கு சக்திக்கு உட்பட்ட வீடுகள் கொண்டுள்ளன. இதில் தொழுகை அறை, பல்நோக்கு மண்டபம், மூன்று வாசிப்பு அறைகள் மற்றும் மேலாண்மை அலுவலகம் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளன.

மேலும், பினாங்கில் 107,000 கட்டப்பட்ட, கட்டிகொண்டிருக்கும் மற்றும் கட்டப்படும் பல்வேறு மலிவுவிலை வீடுகள் உள்ளன. அவை பினாங்கு மக்களுக்கு வழங்கப்படும் என்று டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் கருத்துரைத்தார்.

“2008-ஆம் ஆண்டு முதல், மலிவுவிலை ‘எ’, மலிவுவிலை ‘பி’ மற்றும் வங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் மொத்தமாக 33,847 நிறைவடைந்துள்ளன. 20,721 யூனிட்கள் (கட்டுமானத்தின் பல்வேறு கட்டங்கள்) மற்றும் 52, 174 (ஏற்கனவே கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன) என மொத்தமாக 106, 742 யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.