ஜார்ச்டவுன் – மலேசிய இந்துதர்ம மாமன்றம், இந்து கைதிகளின் ஆன்மீக நல்வாழ்வை ஆதரிப்பதற்கான ஓர் அர்த்தமுள்ள முன்முயற்சியின் ஒரு பகுதியாக, பினாங்கு சிறைச்சாலையில் பிராத்தனை பாமாலை புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இந்த வெளியீட்டு விழா, பினாங்கு சிறைச்சாலை இயக்குநர் துவான் பி.கே.பி ஜூல் ஃபட்லி பின் இஸ்மாயில் மற்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலைய பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
“கடந்த 35 ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் நடைபெறும் வாராந்திர சமய வகுப்புகளின் போது இந்த பாமாலை பிரார்த்தனையில் பயன்படுத்தப்படுகிறது. இது கைதிகளுக்கு ஆன்மீகக் கற்றல் மற்றும் பரிசீலனைக் கொண்டாடுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வாய்ப்புகளை வழங்குகிறது,” என மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறை நூலகத்திற்கு கூடுதலாக இந்துதர்ம சமயப் புத்தகங்கள் (தொகுதி 1 முதல் 6 வரை) முழுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன. இது கைதிகளுக்கான ஆன்மீக வழிகாட்டுதலை வழங்குவதோடு, சமய வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்துவதற்கும் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.
இன்று பினாங்கு அருள்நிலையம் மற்றும் ஓம் சக்தி பக்தர்கள் சங்கம் இணை ஏற்பாட்டில் சிறைக் கைதிகளுக்குத் தீபாவளி பலகாரங்கள் வழங்கப்பட்டன.
‘தீபம்’ என்றால் ஒளி என்று பொருள்படும். எனவே, இருள் நீக்கி ஒளித் தரும் பண்டிகையே தீபாவளி என அழைக்கப்படுகிறது. இப்பண்டிக்கையை அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சிறைக் கைதிகளுக்கும் பலகாரங்கள் வழங்கப்படுகின்றன, என அதன் தலைவர் ந.தனபாலன் தெரிவித்தார்.
பொதுவாகவே, அரசு சாரா இயக்கங்கள் வசதிக் குறைந்த பொது மக்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் சார்ந்த தரப்பினருக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் வேளையில் இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் சிறைக் கைதிகளும் இக்கொண்டாட்டத்திலிருந்து தனித்து விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 23 ஆண்டுகளாக இந்த பலகார அன்பளிப்பு வழங்கி வருவதாக ந.தனபாலன் மேலும் தெரிவித்தார்.
இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையம் மற்றும் ஓம் சக்தி பக்தர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கடந்த அக்டோபர் 18-ஆம் நாள் தீபாவளி பலகாரங்களைத் தயார் செய்தனர். அன்றையத் தினம் இந்தியர்களின் பாரம்பரிய பலகார வகைகளான முறுக்கு, அதிரசம் மற்றும் பல இனிப்பு வகைகளும் சேர்த்து பொட்டலமாகத் தயாரிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு வருகையளித்தார்.
அத்தினத்தன்று, தயார் செய்யப்பட்ட 4,000 பலகாரப் பொட்டலங்களையும் பினாங்கு சிறைச்சாலைக்கு 1,500 பொட்டலங்களும் ஜாவி சிறைச்சாலைக்கு 2,000 பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பினாங்கு சிறைச்சாலை தலைமை இயக்குநர் ஜூல் ஃபட்லி பின் இஸ்மாயில், பட்டர்வொர்த், ஓம் சக்தி ஆன்மீக பக்தர்கள் சங்கத் தலைவர் நல்லதம்பி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.