புதிய குடியிருப்புத் திட்டங்களில் பொழுதுபோக்கு வசதிகள் கட்டாயமாக்க வேண்டும்

Admin
img 20260625 wa0053

புக்கிட் தம்புன் – புதிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள திறந்தவெளி இடங்கள் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் அல்லது தரமான பொழுதுபோக்கு வசதிகள் இல்லாமல் இருப்பதைத் தவிர்க்க, ‘திட்ட அனுமதி’ வழங்கும் தற்போதைய நிபந்தனைகளை மேம்படுத்த வேண்டும் என செபராங் பிறை மாநகர் கழகத்திடம் (எம்.பி.எஸ்.பி) வலியுறுத்தப்பட்டுள்ளது.
img 20260625 wa0057

வர்த்தகம் மற்றும் சமூக ஒற்றுமை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கோ சோன் அய்க் கூறுகையில், இதுவரை வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் தங்களது மேம்பாட்டு நிலப்பரப்பில் 10 சதவீதத்தை திறந்தவெளி பகுதியாகவும், குழந்தைகளுக்கான அடிப்படை விளையாட்டு வசதிகளுடனும் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே இருந்ததாக தெரிவித்தார்.

எம்.பி.எஸ்.பி இன் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து குடியிருப்புப் பகுதிகளின் விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்தவெளிகளை மேம்படுத்த காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
img 20260625 wa0061

“திட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, மேம்பாட்டாளர்கள் கட்டாயமாக நடைபாதை, உடற்பயிற்சி உபகரணங்கள், ‘ஏரோபிக்ஸ்’ நடைபெறும் தளம் மற்றும் மழைநீர் தேங்காமல் இருக்க நிலத்தடி வடிகால் அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கலாம்.

img 20260625 wa0062

“இதன் மூலம் திறந்தவெளி பகுதிகள் மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இடங்களாக உருமாற்றம் காணும்; கனமழைக்குப் பின்னர் நீர் தேங்கும் பகுதிகளாக மாறாது,” என்றார்.

புக்கிட் தம்புன், தாமான் முத்தியாரா தெராத்தாய் திறந்தவெளி மேம்பாட்டு திட்டத்தைத் திறந்து வைத்து ஆட்சிக்குழு உறுப்பினர் கோ இவ்வாறு தெரிவித்தார்.
img 20260625 wa0050
இத்திட்டத்தின் கீழ் ஓட்டப்பாதை, நடைபாதை, நிலத்தடி வடிகால் அமைப்பு, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், இருக்கைகள், குப்பைத்தொட்டிகள், பாதுகாப்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் கூடுதல் நிலவடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து பேசிய கோ சூன் அய்க், எம்.பி.எஸ்.பி மேற்கொண்ட இந்த திறந்தவெளி மேம்பாட்டுத் திட்டம் உயர்தரமானதாக அமைந்துள்ளதுடன், எதிர்கால புதிய குடியிருப்பு மேம்பாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

எம்.பி.எஸ்.பி மாநகர் மேயர் டத்தோ படேருல் அமின் அப்துல் ஹமிட் கூறுகையில், 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த திறந்தவெளி பகுதியை மேம்படுத்த சுமார் ரிம176,006 செலவிடப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைத்தால் அல்லது நிதி நிலை வலுவடைந்தால், ஏற்கனவே உள்ள குடியிருப்புப் பகுதிகளின் திறந்தவெளி வசதிகளையும் எதிர்காலத்தில் மேம்படுத்த எம்.பி.எஸ்.பி தொடர்ந்து முன்னெடுப்பு நடவடிக்கை எடுக்கும், என்றார்.