28 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனை; தொடரும் ஷானின் ஓட்டம்

Admin
shan 1

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய தடகள வரலாற்றில் தனது பெயரைப் பதித்த மூத்த ஓட்டப்பந்தய வீரர் என். சண்முகநாதன், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மிகக் கடினமான சவால்களை வெல்வதே மிகப் பெரிய வெற்றி என்பதை இன்றும் நிரூபித்து வருகிறார்.

1998ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி, கோலாலம்பூரில் நடைபெற்ற 16ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 3,000 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் 8:59.10 வினாடிகளில் ஓடி தேசிய சாதனை படைத்தார். அந்தச் சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் நீடித்து வருகிறது.

செப்டம்பர் 17ஆம் தேதி ஷானுக்கு அதிர்ஷ்டமான நாளாகவே அமைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு இதே நாளில், மலேசிய அனைத்துலக மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில் ஆண்களுக்கான 45-49 வயது பிரிவில் 3,000 மீட்டர் ஓட்டத்தை 10:10.2 வினாடிகளில் கடந்து புதிய தேசிய மாஸ்டர்ஸ் சாதனையைப் படைத்தார். இப்போட்டி மலாயா பல்கலைக்கழக (UM) விளையாட்டரங்கில் நடைபெற்றது.

தற்போது 51 வயதாகும் ஷான், இன்னும் சிறந்த ஓட்டப்பந்தய வீரராகத் திகழ்கிறார். இந்த ஆண்டும் பல போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். அவற்றில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற பந்தாய் மலிண்டோ 10 கி.மீ; மே, 10ஆம் தேதி நடைபெற்ற பந்தாய் ரெமிஸ் 12 கி.மீ; ஆகஸ்ட்,9ஆம் தேதி நடைபெற்ற டாதாரான் வாரிசான் தைப்பிங் 10 கி.மீ மற்றும் செப்டம்பர் 5ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் நடைபெற்ற ‘Property Hero Run’ 10 கி.மீ ஆகியவை அடங்கும்.

“நான் தொடர்ந்து ஓடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு முறையும் ஓடும்போது, நான் விரும்பும் செயலைச் செய்து வருகிறேன் என்ற மனநிறைவு ஏற்படுகிறது,” என்று ஷான் முத்துச் செய்திகளுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையில், வெற்றிக் கொடி நாட்டி வந்த தருணத்தில் எதிர்பாராத சூழலில் கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் அவருக்குக் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. 17 நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர், பின்னர் மன அழுத்தத்துடனும் போராடினார். எனினும், பல்வேறு சிரமங்களைத் தாண்டி மீண்டும் தனது வாழ்க்கையை மீட்டெடுத்தார்.

1998ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தான் பங்கேற்ற ஓட்டத்தை ஷான் இன்றும் தெளிவாக நினைவுகூர்கிறார். அந்தப் போட்டியில் பங்கேற்ற ஒன்பது போட்டியாளர்களில் பெரும்பாலானவர்களைப் பற்றி அவருக்கு தெரியாது. ஆனால், கென்யாவைச் சேர்ந்த உலகத் தரம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியில் இருப்பதை அறிந்ததும் அவருக்கு பதற்றம் ஏற்பட்டதாக தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

10 வீரர்கள் பங்கேற்ற 3,000 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப் போட்டி இறுதிச்சுற்றாகவே நேரடியாக நடத்தப்பட்டது.

“நான் எனது போட்டிக்குள் நுழைந்து, அங்கு திரண்டிருந்த மிகப் பெரிய கூட்டத்தைப் பார்த்ததும் பயந்துவிட்டேன். அங்கு கூடியிருந்த கூட்டம் ‘மலேசியா! மலேசியா! என்று ஆரவாரம் செய்தது. தேசிய அணியின் சீருடையை அணிந்திருந்ததில் பெருமையாக இருந்தாலும், மேலே தலைநிமிர்ந்து பார்க்கக்கூடத் துணியவில்லை. அப்போது கென்ய வீரர் ஒருவர் என்னிடம், ‘உனது காலணிகள் எங்கே?’ என்று கேட்டார். நான் காலணியின்றி ஓடுவதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்,” என ஷான் கூறினார்.

shan 2

“எனது ரஷ்ய பயிற்சியாளர் பாவெல் எப்போதும் சிறந்த ஊக்கமளிப்பவராக இருந்தார். ‘ஷான், உன்னை நீ நம்பு. இது உனது நாடு. ஒரு சாம்பியனைப் போல நட’ என்று அவர் கூறினார். ஆனால், கென்ய வீரர்கள் குறித்து அவர் எனக்குத் தெரிவிக்காததால், அவர் கூறியதைப் பற்றியே நான் சந்தேகப்படத் தொடங்கினேன்.

“போட்டியின்போது கென்ய வீரர்களையும் மற்ற முன்னணி வீரர்களையும் பின்தொடர்ந்தேன். அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாதபோது பதற்றமடைந்தேன். மேலும், ஓட்டத்தின் குறிப்பிட்ட கட்டங்களில் வீரர்கள் தங்களது வேகத்தை மதிப்பிடுவதற்கு உதவும் இடைநேரப் பதிவுகள் குறித்தும் எனக்கு தெரியாது. எனது பயிற்சியாளர் எனது சுற்று நேரங்களை உரக்கக் கூறினார். ஆனால், கூட்டத்தின் பெரும் சத்தத்தால் அவரது அறிவுரைகள் எனது காதுகளுக்கு எட்டவில்லை.

“எதிர்பார்த்தபடியே கென்ய வீரர்கள் முதல் மூன்று இடங்களையும் கைப்பற்றினர். ஜான் கோஸ்கேய் 8:15.34 வினாடிகளில் முதலிடமும், பெர்னார்ட் பார்மசாய் 8:15.37 வினாடிகளில் இரண்டாவது இடமும், கிப்கிருய் மிசோய் 8:18.24 வினாடிகளில் மூன்றாவது இடமும் பிடித்தனர். ஒரு வீரர் போட்டியிலிருந்து விலகிய நிலையில், ஷான் ஒன்பதாவது மற்றும் கடைசி இடத்தைப் பிடித்தார்.

“பின்னர் ஒரு அறிவிப்பு வெளியானது – மலேசியாவுக்கான புதிய சாதனை என்றும், 8:59.10 வினாடிகளில் ஓடிய முதல் மலேசிய ஆண் வீரர் நான் என்றும் அறிவிக்கப்பட்டது. என்னால் அந்தச் சாதனையை முறியடிக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை,” என்றார்.

இதனால் ஊக்கமடைந்த ஷான், அடுத்த மாதம் நடைபெறவிருந்த பாங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக கடுமையாகப் பயிற்சி செய்தார். ஆனால், அவருக்கு பெரும் ஏமாற்றமாக, கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

“அன்றிலிருந்து நான் தடகளத்தை கைவிட்டேன். என் மனம் உடைந்துபோனது,” என்றார் ஷான்.

2015ஆம் ஆண்டு தைப்பூசத்தின்போது ஏற்பட்ட விபத்துக்குப் பின்னர், தனது முழுமையான நினைவாற்றலை மீண்டும் பெற சுமார் ஓராண்டு எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, தன்னைப் பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் மீண்டும் தடகளப் பாதைக்குத் திரும்ப முடிவு செய்தேன், என்றார்.

பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டே அதாவது பாதுகாவலர், தோட்டப் பராமரிப்பாளர், கார் கழுவுபவர் மற்றும் துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட வேலைகளைச் செய்து கொண்டே ஒரு வருடம் எட்டு மாதங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டதன் மூலம் 20 கிலோ எடையை குறைத்தார்.

அவரது தொடர் பயிற்சி 2018ஆம் ஆண்டு ஆசியா பசிபிக் மாஸ்டர் விளையாட்டு (APMG) போட்டியில் பலனளித்தது. பினாங்கு சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், 10 கி.மீ. சாலை ஓட்டம், 3,000 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம் மற்றும் 5,000 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களையும், 1,500 மீட்டரில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

அதுமட்டுமின்றி, பினாங்கு நடத்திய அந்தப் போட்டியில் வீரர்களின் சார்பில் உறுதிமொழி ஏற்கும் கௌரவமும் அவருக்கு வழங்கப்பட்டது.

தடகளத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பும் அன்பும் காரணமாக, கடந்த ஆறு ஆண்டுகளாக பினாங்கு மாநில விளையாட்டு மன்றத்தின் (MSNPP) பகுதிநேர பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இளைஞர் மேம்பாட்டு சுக்மா அணியின் நடுத்தர மற்றும் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்து வருகிறார்.

“பகுதிநேர பயிற்சியாளராக எனக்கு வாய்ப்பளித்த MSNPP இயக்குநர் ஹாரி சாய்க்கு நான் நன்றிக் கூற வேண்டும். இதன் மூலம் எனது அறிவை இளம் வீரர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், அதே நேரத்தில் தொழில்முறை பயிற்சியாளராகவும் வளரவும் முடிகிறது.

“கடினமான காலங்கள் எனக்கு மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுத் தந்ததுடன், என்னை மாற்றியமைத்தன. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கடந்து செல்ல வைத்த இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன். நாம் பொறுமையாக இருக்க வேண்டும்; இறைவன் நமக்கு நிச்சயம் பலன் அளிப்பார். நான் துரத்திக் கொண்டிருக்கும் கனவை நினைத்து எனது பெற்றோர் இப்போதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்,” என்றார்.

திருமணமான ஷான். அவருக்கு 20 வயது மகன் உள்ளார்.
ஷான், சுக்மா போட்டிகளில் 3,000 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 1994ஆம் ஆண்டு பகாங் அணிக்காகவும், 1996ஆம் ஆண்டு சிலாங்கூர் அணிக்காகவும், 1998ஆம் ஆண்டு பினாங்கு அணிக்காகவும் தங்கம் வென்றார்.

மேலும், 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை நடைபெற்ற வங்கிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் மலையான் வங்கி அணிக்காக 3,000 மீட்டர் தடைதாண்டி ஓட்டத்தில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டு ஜொகூர் பாருவில் நடைபெற்ற மலேசிய அரசு ஊழியர்கள் நலன் மற்றும் விளையாட்டு மன்ற (Maksak) போட்டியில் பினாங்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 1,500 மீட்டர் மற்றும் 3,000 மீட்டர் ஓட்டங்களில் தங்கப் பதக்கங்களை வென்றார்.

இன்று, தான் அடைய விரும்புவதைப் பற்றி ஷான் மிகவும் தெளிவாக இருக்கிறார்: முறையான பயிற்சி, முறையான உணவு மற்றும் போதுமான தூக்கம் அவசியம் என்றார்.

“சாம்பியனாக வேண்டுமென்றால் ஒழுக்கம் அவசியம், நன்றாகப் பயிற்சி செய்ய வேண்டும், நன்றாகச் சாப்பிட வேண்டும், நன்றாகத் தூங்க வேண்டும். தூக்கம் மிகவும் முக்கியமானது. நான் வழக்கமாக இரவு 9 மணிக்குள் படுக்கைக்குச் சென்று விடுவேன். இரவு 9.00 மணிக்குப் பிறகு கைப்பேசியைப் பார்க்கக்கூடாது என்ற எனது அறிவுரையை எனது மகனும் கடைப்பிடிக்கிறார்.

“மீண்டும் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆசிய பசிபிக் மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகள் அல்லது உலக தடகள மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மலேசியாவுக்காகப் பங்கேற்க விரும்புகிறேன். 1998ஆம் ஆண்டு APMG போட்டியில் பங்கேற்க எனது பெயரைப் பதிவு செய்திருந்தேன். இந்த முறை மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டுக்காக ஒரு பதக்கத்தை வெல்ல வேண்டும். எனது தடகள வாழ்க்கையை ஆரம்பத்திலேயே கைவிட்டது நான் செய்த தவறு,” என்றார் ஷான்.

shan 3

 

நேர்காணல் முடிவடையும் முன், ஷான் தனது வலது கையின் மேற்பகுதியைக் காட்டினார். அங்கு மலேசியக் கொடியின் கீழ், “SHAN, 3,000m, 8:59.10s, 17.09.1998” என்ற வாசகங்கள் பச்சைக் குத்தப்பட்டிருந்தன.

ஷானைப் பொறுத்தவரை, தனது வாழ்க்கையை என்றென்றும் மாற்றிய அந்த நாளை நினைவுகூரும் தருணமாக அது அமைந்தது.