28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 டேப்லெட்டுகள்; STEM கல்வி விரிவாக்கத்துக்கு புதிய முன்னெடுப்பு

img 20260807 wa0030

பட்டர்வொர்த் – கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், STEM கல்வியை மேம்படுத்துதல், பள்ளி வசதிகளை நவீனப்படுத்துதல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறைத் திறனை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் பினாங்கு மாநில அரசு, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

1c12c73d 55f2 4fd6 b257 6d5c905aec0f

மாநில அரசு, மாநிலக் கல்வி இலாகா, பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் (PIBG), ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினருக்கு இடையிலான சிறந்த ஒத்துழைப்பின் மூலம் இத்திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

2d1c5351 352a 497f 9ce7 bd2fef0a8464

பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு ‘டேப்லெட்’ வழங்கும் விழா,
பினாங்கு தமிழ்ப்பள்ளி 4 மற்றும் 5-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மலாய் மொழி பயிற்சி நூல்கள் வழங்கும் விழா மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான STEM திட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
img 20260807 wa0038

அவரது கூற்றுப்படி, டிஜிட்டல் கற்றல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும், மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் டிஜிட்டல் நூலகங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையிலும், முதற்கட்ட நடவடிக்கையாக 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 டேப்லெட்டுகள் வழங்கப்படுகின்றன.

img 20260807 wa0104

“அடுத்த சில ஆண்டுகளில், பினாங்கில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் டிஜிட்டல் நூலக வசதிகளுடன் கூடிய பள்ளிகளாக உருமாற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த டேப்லெட்டுகள் ஒரு முன்னோடித் திட்டமாகும்.

img 20260807 wa0028

“இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், பள்ளிகளின் தேவைக்கேற்ப டேப்லெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

img 20260807 wa0029

மேலும், தமிழ்ப்பள்ளிகளில் உள்ள மேசைகள் மற்றும் நாற்காலிகளை மாற்றியமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திய முன்னோடி மாநிலங்களில் பினாங்கும் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில், ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மலாய் மொழி பயிற்சி நூல்கள், தற்போது நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு முதல் பள்ளி நேரத்திற்குப் பிறகு சிறப்பு மலாய் மொழி வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் மலாய் மொழித் திறனை மேம்படுத்தி, ‘ரிமூவ் கிளாஸ்’ (Remove Class) தேவையைக் குறைப்பதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மேலும், ஆண்டுக்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிதாக வர்ணம் பூசும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, பிறை தமிழ்ப்பள்ளியில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்திற்கான மொத்தச் செலவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

“இத்திட்டத்திற்கான உண்மையான செலவு சுமார் ரிம70,000 முதல் ரிம80,000 வரை இருக்கும். ஆனால், பேச்சுவார்த்தைகளின் மூலம் வர்ணங்கள் நன்கொடையாகப் பெறப்பட்டதால், தொழிலாளர் கூலிக்கான சுமார் ரிம37,000 ரிங்கிட் செலவை மட்டுமே ஏற்க வேண்டியிருந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் பினாங்கில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் ஒருங்கிணைப்புத் திட்டங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சிகள் மூலம், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறைத் திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநிலக் கல்வி இலாகா இயக்குநரைப் பிரதிநிதித்து, பள்ளி நிர்வாகப் பிரிவின் (தொடக்கப்பள்ளிப் பிரிவு) தலைமை உதவி இயக்குநர் ஹாஜி ஹுசைனி அப்துல்லா, பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி சிறப்புக் குழு உறுப்பினர்கள், எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் லிங்கேஸ்வரன், தலைமை ஆசிரியர் வாரியத் தலைவர் சக்திவேல், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

2026-ஆம் ஆண்டிற்கான STEM திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மூன்று நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 305 மாணவர்கள் பங்கேற்கும் ‘Electronic Robotic Block Course’ திட்டத்தை தொப் பெஸ்ட் ரிசோர்ஸ் சென் பெர்ஹாட் நிறுவனமும், 250 மாணவர்கள் பங்கேற்கும் ‘International Young Innovator – Build Your Own Robot’ திட்டத்தை சிஸ்கோர் சென் பெர்ஹாட் நிறுவனமும், 48 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் ‘AI Fundamentals with Kwaki Kids’ திட்டத்தை பினாங்கு STEM நிறுவனமும் செயல்படுத்தவுள்ளன.

“STEM கல்வி குறிப்பாக ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான திட்டங்களில் அதிகமான மாணவர்கள் பங்கேற்கும் வகையில், பல்வேறு சேவை வழங்குநர்களை ஈடுபடுத்தும் அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

“இந்த ஆண்டு, மூன்று STEM சேவை வழங்குநர்களுடன் இணைந்து முன்னோடித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களுக்கான செலவுகள் அதிகம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், இவை மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க பயன்களை வழங்குகின்றன,” என்று பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும்
மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுத் தலைவருமான குமரன் கிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.

இந்த முன்னோடித் திட்டம் சிறந்த பலன்களை வழங்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் இதன் செயல்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், கற்றல் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பள்ளி நேரத்திற்குப் பிறகு சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்தல் போன்ற முயற்சிகள் மூலம், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மலாய் மொழித் திறனை மேம்படுத்துவதற்கும் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தரமான கல்வி வசதிகளைப் பெறுவதையும், எதிர்கால தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வதையும் உறுதி செய்வதே மாநில அரசின் இம்முன்னெடுப்புகளின் முக்கிய நோக்கம் என்றும் குமரன்
விளக்கமளித்தார்.