553 குடியுரிமை பிரச்சனைகளில் 37-க்கு மட்டுமே தீர்வு – பேராசிரியர்.

இந்நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படுவதற்கு முதல் காரணியாக விளங்குவது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பிரச்சனையைக் களையும் பொருட்டு பினாங்கு மாநில அரசு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள குடியுரிமை விவரங்களுக்கானச் சிறப்பு குழுவின் முயற்சியால் கடந்த பிப்ரவரி 2013-ஆம் ஆண்டு தொடங்கி 30 ஜுன் 2015 வரை குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுக்காண 553 விண்ணப்பங்கள் தேசிய பதிவு இலாகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

கொம்தாரில் நடைபெற்ற குடியுரிமை செய்தியாளர் சந்திப்பில் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமியுடன் ஐந்து குடியுரிமை அதிகாரிகள்.
கொம்தாரில் நடைபெற்ற குடியுரிமை செய்தியாளர் சந்திப்பில் இரண்டாம் துணை முதல்வர் ப.இராமசாமியுடன் ஐந்து குடியுரிமை அதிகாரிகள்.

ஆனால், அதில் 37 விண்ணப்பங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளதாக கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமது அதிருப்தியை தெரிவித்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. ஒரு விண்ணப்பத்தின் முடிவினை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க தேசிய பதிவு இலாகாவிற்கு இரண்டு வருடத்திற்கு மேல் கால அவகாசம் தேவைப்படுவதற்கானக் காரணம் தமக்கு புரியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார் துணை முதல்வர். இதனிடையே, ஒருவருக்கு குடியுரிமை மறுக்கப்படுவதற்கானக் காரணத்தையும் தேசிய பதிவு இலாகா தெளிவாக குறிப்பிடுவதில்லை. இந்த அவலநிலையில் பிற இனத்தைக் காட்டிலும் அதிகமான இந்தியர்களே பாதிப்புக்குள்ளாகின்றனர்.

அதோடு, அதிகமான முதியோர்கள் மலாய் மொழியில் புலமை பெற்றிருக்கவில்லை என்பதனைக் காரணமாகக் காட்டி அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படாமல் இருப்பது வருத்தமாக உள்ளதாக மேலும் விவரித்தார். இந்நிலைமை நீடித்திருந்தால் சம்மந்தப்பட்டவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அதிலும், கல்விப் பயிலும் சில மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே படிப்புக்கு முடிப்புப் போடும் நிலை நம் நாட்டில் இன்னமும் நடக்கிறது. இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காண வழக்கறிஞரின் உதவியை நாடுகிறது பினாங்கு குடியுரிமை சிறப்புக்குழு.