i-Sejahtera தங்கத் திட்டத்திற்கான மாநில அரசின் ஒதுக்கீடு ரிம65 மில்லியனாக உயர்வு

Admin
whatsapp image 2025 11 14 at 15.01.23

பினாங்கு மாநில அரசாங்கம், சமூக நலத்திட்டங்களை, குறிப்பாக தங்கத் திட்டங்களை (i-Sejahtera) மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டிற்கான நிதியுதவியை ரிம65 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரிம53.57 மில்லியனை விட குறிப்பிடத்தக்க அளவில் உயர்வுக் காண்கிறது.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பாதிக்கப்படக்கூடியவர்களை ஆதரிப்பதிலும், மாநில மக்கள் வழங்கும் பங்களிப்புகளை மதிப்பீடு செய்வதிலும் மாநில அரசின் உறுதியை இந்த நிதியளிப்பு அதிகரிப்பு பதிவு செய்கிறது
என்று தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில், இறுதிச் சடங்கு உதவித்தொகையை உள்ளடக்கி, மாநில அரசு மொத்தமாக ரிம56.24 மில்லியனை 286,335 பெறுநர்களுக்கு வழங்கியுள்ளது.

“2025 அக்டோபர்,31 நிலவரப்படி, மாநில அரசு 287,923 பெறுநர்களை உள்ளடக்கிய மொத்தம் RM53.57 மில்லியனை செலவிட்டுள்ளது.

“உண்மையில், மக்கள் நலனில் அக்கறைக் கொண்டுள்ள ஒரு மாநிலமாகவும், எந்தத் தரப்பினரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, 2026 ஆம் ஆண்டிலும் ரிம65 மில்லியன் மதிப்பில் இந்தத் திட்டத்தைத் தொடர மாநில அரசு திட்டமிட்டுள்ளது,” என்று மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், 2026ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநில வரவு செலவுத் திட்டத்தை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் போது இதனைத் தெரிவித்தார்.

மத பன்முகத்தன்மை மற்றும் முக்கிய விழாக்களையும் கொண்டாடும் ஒரு மாநிலமாக விளங்கும் மாநில அரசு ‘பினாங்கு ஹர்மோனி’ கொண்டாட்டத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்றும், புக்கிட் மெர்தாஜாம் மற்றும் பாயான் பாருவில் புதிய ஹர்மோனி தெருக்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் கொன் இயோவ் கூறினார்.

கூடுதலாக, மாநிலத்தில் உள்ள சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சியாக, மாநில அரசு பல்வேறு முக்கிய விழாக்கள், வழிபாட்டுத் தல திட்டங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் அமர்வுகளையும் தொடர்ந்து ஏற்பாடு செய்துள்ளதாக அவர் கூறினார்.

“ஒட்டுமொத்தமாக, பினாங்கில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான (RIBI) திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆதரிக்க மாநில அரசு குறைந்தது ரிம5 மில்லியனை ஒதுக்கியுள்ளது.

இந்த ஒதுக்கீட்டில் முஸ்லிம் அல்லாத விவகாரங்களுக்கான MMK குழுவின் கீழ் ஒதுக்கப்பட்ட ரிம150,000 மற்றும் RIBI அறக்கட்டளை கணக்கு ஆகியவை இடம்பெறாது.

“2025 செப்டம்பர் நிலவரப்படி, மொத்தம் 77 முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் திட்டங்களை மேம்படுத்துவதற்கும் மாநில அரசிடமிருந்து பங்களிப்புகளைப் பெற்றுள்ளன,” என்று அவர் கூறினார்.