JPWK பினாங்கு மாநிலத்தின் எதிர்கால ‘திறன் முகமைக்கு’ அடித்தளம் – முதல்வர்

Admin

பிறை – பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ், பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின்(JPWK) 2022/2023-ஆம் ஆண்டு தவணைக்கான நியமனக் கடிதத்தை இசோரா தங்கும் விடுதி அரங்கத்தில் வழங்கினார்.

“JPWK குழுவினர் எதிர்கால சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது ஊராட்சி மன்ற கவுன்சிலர்களாக உருமாற வேண்டும். இதன் மூலம்
மாநில அரசின் ‘திறன் முகமை’ (Talent Pool) திட்டத்தில் பெண்களும் முடிவு எடுக்கும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட 30 விழுக்காட்டை அடைய முடியும்,” என பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின்(JPWK) 2022/2023-ஆம் ஆண்டு தவணைக்கான நியமனக் கடிதத்தை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் இவ்வாறு கூறினார்.

மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் JPWK பங்கு பெற்று பெண்களும் எதிர்காலத்தில் முடிவு எடுக்கும் இடத்தில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

JPWK குழு, சமூக மேம்பாட்டுக்கு திட்டங்கள் செயல்படுத்துவது மட்டுமின்றி பெண்கள் மற்றும் குடும்ப முன்னேற்றத்திற்கு ஊன்றுகோளாகத் திகழ்வது பாராட்டக்குரியது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 40 JPWK குழுக்கள் இடம்பெறுகின்றன.

“தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்கை நோக்கி பயணிக்க 40 JPWK குழுவினர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவர்,” என நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்று நியமிக்கப்பட்ட 562 உறுப்பினர்களில் 349 (62%) முன்னாள் உறுப்பினர்களும் மாறாக 213 (38%) புதிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத மத விவகார ஆட்சிக்குழு உறுப்பினருமான சோங் எங் அவர்களும் உரையாற்றினார்.

பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன்; புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் லீ சுன் கிட்; பினாங்கு மேம்பாட்டுக் கழக மேலாண்மை அதிகாரி ஒங் பீ லெங் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.