RAC, LPNPP கூட்டு முயற்சியில் கம்போங் மானிஸ் மறு மேம்பாட்டுத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

Admin
whatsapp image 2024 01 16 at 13.31.02

செபராங் ஜெயா –இரயில்வே சொத்துடைமை கார்ப்பரேஷன் (RAC) மற்றும் பினாங்கு மாநில வீட்டுவசதி ஆணையம் (LPNPP) கூட்டு முயற்சியின் மூலம் பிறை சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கம்போங் மானிஸ் மறு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்துவதற்கானப் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் RAC இன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ அசார் அஹ்மாட் மற்றும் LPNPP பொது மேலாளர் அய்னுல் ஃபாதிலா சம்சுதி ஆகியோருக்கு இடையில் கையெழுத்தானது. இதனை முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் மற்றும் மலேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

மேலும் கொன் இயோவ் பேசுகையில், லாட் 286 (கம்போங் மானிஸ்) இல் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தை (RMM) உருவாக்க RAC மற்றும் பினாங்கு மாநில அரசு இடையிலான முதல் ஒத்துழைப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று கூறினார்.

நிதி, பொருளாதார மேம்பாடு மற்றும் நிலம் மற்றும் தகவல்தொடர்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சாவ், முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) இறுதி செய்யப்பட்ட பிறகு கூடுதல் தேவைகள் இருந்தால், வாக்குறுதி ஒப்பந்தமாக (MOA) மாற்றப்படலாம், என்றார்.

“LPNPP-இன் லாட் 671, பண்டார் பிறையின் 9.33 ஏக்கர் பரப்பளவில் அருகிலுள்ள தளத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு இருப்பதால், இந்தப் பகுதியின் வளர்ச்சியை முழுமையாக மதிப்பாய்வு செய்கிறது. இது அத்தளத்திலிருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
“உண்மையில், இத்திட்டத்திற்கு விரிவான வளர்ச்சி முக்கியமானது, ஏனெனில், இந்தப் பகுதி திட்டமிடப்படாத குடியிருப்பு இடமாகும், முறையான வடிகால் அமைப்பு இல்லாமல் வெள்ளப் பிரச்சனைகளுக்கு நேரிடுகிறது.

“எனவே, இந்தப் பகுதியில் உள்ள RAC மற்றும் LPNPP திட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி, உள்ளூர் சமூகத்தின் நல்வாழ்வுக்காக, தற்போதுள்ள குடியிருப்பின் வடிவமைப்பை மாற்றியமைக்கும்,” என்று அவர் தி லைட் தங்கும்விடுதியில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கூறினார்.

மேலும், வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர், டத்தோஸ்ரீ சுந்தராஜூ; மலேசிய போக்குவரத்து அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ எம். ஜன சந்திரன்; மச்சாங் புபோக் சட்டமன்ற உறுப்பினர், லீ கை லூன்; செபராங் பிறை மாநகர் கழக மேயர், டத்தோ அசார் அர்ஷாத்; மத்திய செபராங் பிறை மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் டான் செங் சான் மற்றும் LPNPP குழு உறுப்பினர்கள் இடம்பெற்றனர்.

கொன் இயோவ் கூறுகையில், இந்த மறுவடிவமைப்பு வணிக இடங்களுடன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும், மேலும் சீரான போக்குவரத்து பாதைகளுடன் சிறந்த திட்டமிடப்பட்ட வளர்ச்சியை வழங்குகிறது.
“பினாங்கு மக்களின் நலனுக்காக கம்போங் மானிஸை மேம்படுத்துவதில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்படுகிறது.

“எனவே, கம்போங் மானிஸ் வியூக மறுவடிவமைப்புத் திட்டம் எதிர்காலத்தில் RAC மற்றும் மாநில அரசாங்கத்திற்கு இடையிலான ஒத்துழைப்பிற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும் என்று,” நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில் சியூ ஃபூக் கூறுகையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், கம்போங் மானிஸில் RAC-க்கு சொந்தமான மூன்று நிலங்கள் பல்வேறு வசதிகள் கூடிய வணிக மையங்களாக மேம்பாடு காணும்.

“இந்த நிலத்தில் திட்டமிடப்படும் மேம்பாட்டு வணிக அம்சத்தை மட்டும் முன்னிலைப்படுத்தாது. இதில் போக்குவரத்து மையம், சிறு வியாபாரம், கல்வி நிறுவனங்கள் மற்றும் மிக முக்கியமாக வீட்டுவசதி போன்ற பிற கூறுகளும் உள்ளடங்கும்.

“இந்த கூறுகள் அனைத்தும் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள்தொகையின் இயக்கம் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், சிறந்த தரமான வாழ்க்கை முறையை நோக்கி வாழ்வாதாரத்தை அதிகரிக்கும்.

“எனவே, கம்போங் மானிஸில் குடிமக்களுக்கு மறு மேம்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த LPNPP இன் பங்கு முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, மாநில அரசு கம்போங் மானிஸில் உள்ள 289க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுக் காண இப்பகுதியில் மறுசீரமைப்புத் திட்டத்தை செயல்படுத்த உத்தேசித்துள்ளது.