RIBI நிதியத்தின் கீழ் 53 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி – ஜெக்டிப்

Admin

பட்டர்வொர்த் – “பினாங்கு மாநில அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளம் நிதியம்(RIBI) மூலம் ரிம8,479,409.44 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. இதுவரை 202 இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்பட்டது,” என வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

RIBI நிதியத்தின் கீழ் சீனக் கோவில்கள், இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், குருத்வாரா ஆகிய இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தளங்கள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதுவரை இந்நிதியம் மூலம் 53 இந்து ஆலயங்களுக்கு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்பட்டது, என்றார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ ஆலயக் கட்டடக் கூரையில் ஏற்படும் நீர் கசிவைக் காண்பிக்கிறார்.

மாநில அரசு RIBI நிதியம் மூலம் பட்டர்வொர்த், அருள்மிகு ஸ்ரீ பாலசுந்தர் செல்வ விநாயகர் ஆலய மேம்பாட்டுப் பணிக்காக ரிம50,000 நிதியுதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஆலயத்தில் நீர் கசிவு ஏற்படுவதால் கூரைப் பராமரிப்பு; அர்ச்சகர் அறை நிர்மாணிப்பு; ஆகிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரிம100,000 நிதி தேவைப்படுகிறது. எனவே, RIBI நிதியம் மூலம் அதிகபட்ச நிதியான ரிம50,000 வழங்கப்படுகின்றது.

தற்போது மழைக் காலம் என்பதால் இந்த கூரை பராமரிப்புப் பணி உடனடியாக மேற்கொள்வது அவசியம், என ஜெக்டிப் கூறினார்.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தள நிர்வாகத்தினர் தங்களின் தள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள RIBI நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

பாகான் டாலாம் வட்டாரத்தில் RIBI நிதியத்தின் கீழ் இந்த ஆலயம் மூன்றாவது வழிபாட்டு தளமாக நிதியுதவி வழங்கப்படுகிறது. பினாங்கு மாநில அரசு அனைத்து இன மக்களின் சமயம், கலாச்சாரம் மற்றும் மதம் ஆகிய கோட்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி இம்மாநிலத்தின் சுபிட்சத்தைப் பராமரிக்கிறது என அதன் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி இவ்வாறு கூறினார்.

மேலும், இந்த ஆலய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரிம23,000 நிதியுதவி வழங்கியதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் தெரிவித்தார்.

இந்த ஆலய மேம்பாட்டுப் பணிகள் தொடங்க புதிய குத்தகையாளர் அடையாளம் காணப்பட்டுக் கூடிய விரைவில் நிர்மாணிப்புப் பணிகள் தொடங்கப்படும் என ஆலய நிர்வாக உறுப்பினர் தெரிவித்தார். மேலும், இந்த ஆலயம் முதல் முறையாக RIBI நிதியுதவி பெற விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது கோவிட்-19 போர் களத்தில் இன்னும் முழுமையாக வெற்றி பெறாத சூழலில் பொது மக்கள் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள்(எஸ்.ஓ.பி) பின்பற்றுவது அவசியம். அதுமட்டுமின்றி, ஓமிக்ரான் வைரஸ் புதிய நச்சுயிரியாக அச்சுறுத்துவதால் பொது மக்கள் கூடுதல் கவனத்துடன் உடல் சுகாதாரக் கூறுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.