STEM கல்வி, ஆரோக்கியத்தை ஊக்குவித்த குளோ-வாக் 11.0

Admin
dsc01980 1

ஜார்ச்டவுன் – டெக் டோம் பினாங்கு ஏற்பாட்டில், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமூக ஒற்றுமை மற்றும் STEM கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற குளோ-வாக் 11.0 நிகழ்ச்சியில், தி வாட்டர்ஃபிரண்ட் ஷாப்பஸில் சுமார் 3,500 பேர் திரண்டனர்.

 dsc8437 enhanced nr 82
11ஆவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், குடும்பங்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெருநிறுவனப் பங்காளர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.
 dsc8515 enhanced nr 83

இந்த ஆண்டு, டெக் டோம் பினாங்கின் STEM கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ரிம200,000 நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
dsc04726

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாகான் ஜெர்மால் சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன், குளோ-வாக் நிகழ்ச்சி ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமூகப் பங்கேற்பு மற்றும் STEM கல்வி ஆகியவற்றை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளதாகக் கூறினார்.
dsc 7340
STEM கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை என்றும், மாணவர்களிடையே ஆர்வம், படைப்பாற்றல், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

dsc 7876

“பினாங்கு ஏற்கனவே தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் புத்தாக்கத் துறைகளுக்கான சிறந்த மையமாகத் திகழ்கிறது. பல்வேறு தொழில்துறைகள் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், ‘ஓட்டொமேஷென்’ மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு வரும் நிலையில், நமது இளைஞர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது அவசியம்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

 dsc8308 61

மேலும், பெருகிவரும் டிஜிட்டல் உலகில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் சீ யீ கீன்,
பங்கேற்பாளர்கள் சுறுசுறுப்பாக இருப்பதுடன், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடவும் ஊக்குவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு விளையாட்டுகள், கிக் பாக்ஸிங் பயிற்சி, வண்ணம் தீட்டும் போட்டிகள், உணவு மற்றும் பானக் கடைகள், விளம்பரதாரர்களின் அரங்குகள் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன் சிறப்பு அம்சமாக, இரவு 7.45 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்ட 3 கி.மீ. தூர நடைப்பயணம் அமைந்தது.

இதற்கிடையில், டெக் டோம் பினாங்கு தலைமை நிர்வாக அதிகாரி கூ பூ வூய், குளோ-வாக்கிற்கான தொடர்ச்சியான ஆதரவு, STEM கல்வி மீதான சமூகம் மற்றும் தொழில்துறையின் வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகக் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, டெக் டோம் பினாங்கு மையத்தின் STEM திட்டங்கள் மற்றும் நேரடி கற்றல் அனுபவங்கள் வாயிலாக அதிகமான மாணவர்கள் மற்றும் சமூகத்தினரைச் சென்றடைய உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும், குளோ-வாக் 11.0-இன் வெற்றிக்கு பங்களித்த டெக் டோம் பினாங்கு, ஆதரவாளர்கள், கூட்டாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பினாங்கு மாநிலக் கல்வித் துறை, பினாங்கு மாநகர் கழகம், காவல் துறை மற்றும் பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் உள்ளிட்ட ஆதரவு நிறுவனங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் சீ அவர்கள் நன்றித் தெரிவித்தார்.