ஜாலான் புக்கிட் கம்பீரில் 40 கி.மீ வேக வரம்பை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை -குமரேசன்

04ecad5b a14c 4d46 8f58 854cc36cc7f4

குளுகோர் – ஜாலான் புக்கிட் கம்பீர் சாலையின் மலைப்பாதையில் திடீரென 40 கி.மீ. வேக வரம்பு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகனமோட்டிகள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், குறிப்பாக மேடான பகுதியில் இருந்து திடீரென கீழ்நோக்கிச் செல்லும் சாலையில் 40 கி.மீ. வேகத்திற்குள் வாகனத்தை குறைப்பது சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் வேகக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சில வாகன ஓட்டிகளுக்கு அபராத அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர்
இன்று அவ்விடத்தைப் பார்வையிட்டபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த வேக வரம்பு சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை (JKR) மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இப்பகுதியில் ‘U-turn’ வசதி, நான்கு சந்திப்புகள், பள்ளி மற்றும் குடியிருப்புப் பகுதிகள் இருப்பதுடன், கடந்த காலங்களில் சில விபத்துகளும் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், சாலை நிலைமை, போக்குவரத்து நெரிசல் மற்றும் அப்பகுதியின் தற்போதைய பயன்பாடு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, 40 கி.மீ. வேக வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குமரேசன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

“சாலைப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ளாமல் ஒரே மாதிரியான வேக வரம்பை அமல்படுத்துவது பொருத்தமானதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தேவையானால் 40 கி.மீ-க்கு பதிலாக 60 கி.மீ வேக வரம்பை நிர்ணயிப்பது குறித்து ஜே.கே.ஆர் மற்றும் காவல்துறை மறுபரிசீலனை செய்யலாம்,” என கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து மின்னஞ்சல், முகநூல் மற்றும் புலனம் குழுக்கள் வாயிலாக பல புகார்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இப்பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்துகளின் முழுமையான விபரங்களைப் பெறுவதற்காக
காவல்துறையின் மாநிலத் தலைமையகம் (IPK) மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை பிரிவிடம் அதிகாரப்பூர்வமாக தகவல் கோரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், வேகக் கட்டுப்பாடு குறித்து பொதுமக்களின் கவனத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், மலைப்பகுதியின் மேல்புறத்தில் கூடுதலாக ஒரு டிஜிட்டல் வேகக் காட்சிப்பலகை, வேகக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு பகுதி என்ற எச்சரிக்கைப் பலகை மற்றும் “RED SLOW DOWN BAR” எனப்படும் எச்சரிக்கைத் தடுப்பு அமைக்குமாறு ஜே.கே.ஆர்-க்கு குமரேசன் பரிந்துரை விடுத்துள்ளார்.

அதேவேளையில், காவல்துறையினர் இப்பகுதியில் தினசரி வேகக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என்றும், அவ்வப்போது சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வேக விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் கருத்துகளையும் சாலைப் பாதுகாப்புத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஜே.கே.ஆர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து 40 கி.மீ. வேக வரம்பை மீண்டும் ஆய்வு செய்வர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

84e81b08 8f70 41a6 bb38 abd8da8ea954
சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் கிடைக்கப்பெற்ற புகார்களை காண்பிக்கின்றார்.