எஸ்.பி.எம் மாணவர்களுக்கான தேர்வு நுட்பப் பயிற்சி பட்டறை

Admin
teknik menjawab

பட்டர்வொர்த் – மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், “எஸ்.பி.எம் மாணவர்களுக்கான தேர்வு நுட்பப் பயிற்சிப் பட்டறை” நடைபெற்றது. மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களின் தேர்வுத் திறனை மேம்படுத்தி, சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் இப்பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பட்டறையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், மாணவர்களின் தேர்வுத் தயாரிப்புக்கு இத்தகைய பயிற்சிப் பட்டறைகள் பெரிதும் உதவுவதாகத் தெரிவித்தார்.

மலாய் மொழி, ஆங்கிலம், வரலாறு, கணிதம் மற்றும் நன்னெறிக் கல்வி
ஆகிய ஐந்து முக்கியப் பாடங்கள் தொடர்பில், தேர்வு வினாக்களுக்கு முறையாகப் பதிலளிக்கும் நுட்பங்கள், தேர்வு உத்திகள் மற்றும் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் மாணவர்களுக்கு இப்பட்டறையில் கற்றுத் தரப்பட்டன.

முதற்கட்டப் பயிற்சியில் மூன்று பாடங்கள் இடம்பெற்ற நிலையில், எஞ்சிய இரண்டு பாடங்களுக்கான பயிற்சி எதிர்வரும் சனிக்கிழமை, அக்டோபர்,3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாணவர்களின் கல்வித் தயாரிப்பை வலுப்படுத்தும் வகையில் பயனுள்ள இந்நிகழ்ச்சிவை ஏற்பாடு செய்த மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையக் கல்விப் பிரிவினருக்கு குமரன் பாராட்டு தெரிவித்தார்.

மேலும், மலேசிய இந்துதர்ம மாமன்றம் பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் நந்தகுமார், கல்விப் பிரிவுத் தலைவர் டாக்டர் ஆர். கோபிநாத் மற்றும் முழு ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“கல்வியே வலுவான எதிர்காலத்திற்கான அடித்தளம். இளம் தலைமுறையினரை வலுப்படுத்தவும், அவர்களின் முழுத் திறனை வெளிக்கொணரவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என குமரன் கேட்டுக்கொண்டார்.

“பட்டர்வொர்த் டிஜிட்டல் நூலகத்தில் நடைபெற்ற இப்பட்டறைக்கு மண்டப வாடகைச் செலவுக்கு உதவியளிப்பதன் மூலம் எனது பங்களிப்பை வழங்க முடிந்ததில் தனிப்பட்ட முறையில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற கல்விசார் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளிப்பது நமது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தில் நாம் செய்யும் முதலீடாகும், என்றார்.

இந்நிகழ்ச்சியில் செபராங் பிறை மாநகர் கழக (எம்.பி.எஸ்.பி) கவுன்சிலர் லிங்கேஸ்வரன் சர்மர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

எஸ்.பி.எம் தேர்வை எதிர்கொள்ளவுள்ள அனைத்து மாணவர்களும் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, கடினமாக உழைத்து, தங்கள் மீது நம்பிக்கை வைத்து சிறந்த தேர்ச்சிப் பெற வேண்டும் என மலேசிய இந்துதர்ம மாமன்ற பினாங்கு அருள்நிலையத் தலைவர் தனபாலன் வாழ்த்துத் தெரிவித்தார்.