நூற்றாண்டு வரலாற்றுடன் தொடரும் பிறை தமிழ்ப்பள்ளியின் கல்விப் பயணம்

Admin
img 20260926 wa0079

பிறை – பிறை தமிழ்ப்பள்ளி தனது 100 ஆண்டுகால கல்விப் பாரம்பரியத்தையும் மரபையும் தொடர்ந்து பாதுகாத்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு தாய்மொழிக் கல்வியை வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

img 20260926 wa0071

100 ஆண்டுகள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல என்றும், அது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல தலைமுறையினரின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் பங்களிப்பின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
img 20260926 wa0059

பிறை தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து பள்ளியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, தங்களது திறன்கள், அனுபவங்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்தி பள்ளியின் வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
img 20260926 wa0077

“நாம் வெற்றி பெற்றிருந்தால், ஒரு நாள் நமது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மீண்டும் பள்ளியுடன் இணைந்து, தங்களது நிபுணத்துவத்தைப் பள்ளியின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் வழங்க வேண்டும்,” என்றார்.

d432ef22 2e27 4d69 b534 a83b3e6e864f

பிறை தமிழ்ப்பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடைப்பயணத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு தெரிவித்தார்.
img 20260926 wa0064

இதனிடையே, மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக் குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமு, பினாங்கில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மாநில அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் நிதியுதவிகளையும் வழங்கி வருவதாகக் கூறினார்.
img 20260926 wa0062

தமிழ்ப்பள்ளிகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மாநில அரசு ஆண்டுதோறும் ரிம2.45 மில்லியன் நிதியை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
img 20260926 wa0080

“தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதற்கு மாநில அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது,” என்றார்.

பிறை தமிழ்ப்பள்ளியின் 100ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த்க ஆண்டு பள்ளியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவற்றில் பள்ளிக் கட்டடத்துக்கு புதிய வர்ணம் பூசுதல், சாலை மற்றும் மண்டபத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், தமிழ்ப்பள்ளிகளுக்குச் சொந்தமான நிலம் இருப்பதை உறுதி செய்வதிலும் மாநில அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ தெரிவித்தார்.

அந்த வகையில், ஜூரு தமிழ்ப்பள்ளிக்காக சுமார் 12 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளதாகவும், அங்கு புதிய பள்ளிக் கட்டடம், மண்டபம் மற்றும் விளையாட்டுத் திடல் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தமிழ்ப்பள்ளிகளுக்காக மூன்று புதிய கட்டடங்களை அமைப்பது மாநில அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்றும் டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ கூறினார்.

அதன்படி, இராஜாஜி தமிழ்ப்பள்ளி, சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி மற்றும் ஜூரு தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கான புதிய கட்டடத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்த மூன்று பள்ளிகளின் புதிய கட்டடத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டால், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காலகட்டமாக அமையும்,” என்றார்.

இதற்கிடையில் முதலமைச்சர், கடந்த 17 முதல் 18 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சமூகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு ரிம130 மில்லியனுக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இலக்கமயமாக்கல் முயற்சிகளுடன் STEM கல்வியிலும் மாணவர்களின் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“நமது குழந்தைகளை எதிர்காலத்திற்குத் தயார்படுத்துவதுடன், குழந்தைகளுக்கான எதிர்காலத்தையும் நாம் உருவாக்க வேண்டும்,” என்றார்.

100 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட பிறை தமிழ்ப்பள்ளி, பினாங்கில் இந்தியச் சமூகத்தின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியின்போது, முதலமைச்சர் பிறை தமிழ்ப்பள்ளியின் புதிய சந்திப்புக் கூட்ட அறையையும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிறை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவி மோகனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.