ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் வாழும் இந்திய சமூகத்தின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.
மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், பல இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்த மக்களின் ஒற்றுமையே பினாங்கு மாநிலத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

ஒளி இருளை வெல்வதைக் குறிக்கும் தீபாவளி, நம்பிக்கை, நன்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் செய்தியையும் எடுத்துரைப்பதாகக் கூறிய அவர், இத்தகைய உயரிய பண்புகள் பினாங்கின் பன்முகத்தன்மையுடன் நெருங்கிய தொடர்புடையவை என்றார்.
பினாங்கு2030 தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதுடன், மக்களின் நல்வாழ்வையும் சமூக நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் மாநிலமாகப் பினாங்கை உருவாக்குவதே அரசின் இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், தென் செபராங் பிறையில் ரிம18.4 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்படும் பைராம் தோட்ட ஒருங்கிணைந்த மறுகுடியிருப்புத் திட்டத்தின் கீழ், 68 இரட்டை மாடி வீடுகள் கட்டுவதுடன், ஒரு பள்ளி மற்றும் மகா மாரியம்மன் ஆலயத்தைப் பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், பட்டர்வொர்த், ஜாலான் சீராமில் நவீன மின்சார தகன மையம் அமைப்பதுடன், மாநிலத்திலுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் நில உரிமையைப் பெற்றுத் தருவதற்கான உறுதிப்பாட்டையும் மாநில அரசு கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
கல்வித்துறையைப் பொறுத்தவரை, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை 3,911 மாணவர்களுக்கு மொத்தம் ரிம5,069,600 மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை வழங்கியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும், அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவர்கள் மற்றும் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற எஸ்.பி.எம் , எஸ்.டி.பி.எம் மாணவர்கள் என மொத்தம் 156 பேருக்கு ரிம149,600 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமூக மேம்பாடு என்பது அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல், கல்வி மற்றும் மனித மூலதன மேம்பாட்டையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், உயர் மதிப்புத் தொழில்துறைகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தரமான முதலீடுகள் வாயிலாக, பினாங்கு மாநிலம் நாட்டின் முக்கியப் பொருளாதார வளர்ச்சி மையங்களில் ஒன்றாகத் தொடர்ந்து திகழ்கிறது.
எனினும், பொருளாதார வளர்ச்சியை முதலீடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு மட்டும் மதிப்பிடாமல், அதன் மூலம் மக்களின் வருமானம் உயர்கிறதா, வேலை வாய்ப்புகள் உருவாகின்றனவா, வாழ்க்கைத் தரம் மேம்படுகிறதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும், என்றார்.
இதற்காக, பினாங்கு மாநிலத்தின் 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பொருளாதார வலுவூட்டல், உள்கட்டமைப்பு மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு 514 திட்டங்களைச் செயல்படுத்த ரிம280.17 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பினாங்கு இந்திய சமூகமும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதை மாநில அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
பினாங்கின் உண்மையான பலம் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்லாமல், மக்களிடையே நிலவும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திலும் அடங்கியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர், வேறுபாடுகளை மதித்து, சமூக நல்லிணக்கத்தைப் பேணி, எதிர்காலத் தலைமுறையினருக்காக ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இவ்விழா நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவரட்டும் எனத் தனது தீபாவளி வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோ’ ஸ்ரீ உத்தாமா ஹாஜி ரம்லி பின் ஙா தாலிப், ஆளுநரின் துணைவியார் தோ பூவான் ராஜா டத்தோ ஸ்ரீ உத்தாமா நோரா அஷிகின் பிந்தி ராஜா அப்துல்லா, பினாங்கு மாநில சபாநாயகர் டத்தோ ஸ்ரீ லாவ் சூ கியாங், இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு, பினாங்கு மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் ஜஃப்ரி பின் அப்துல் ஜலீல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.