ஜெலுத்தோங் – ஜெலுத்தோங் நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில், அத்தொகுயில் மேல்கல்வியைத் தொடரவிருக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இந்தச் சலுகைகளைப் பெற வசதி குறைந்த (பி 40) குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 11 தனியார் மற்றும் பொது பல்கலைக்கழக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர் தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர், தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தகுதியான மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை ஜெலுத்தோங் நாடாளுமன்ற சேவை மையத்தில் ஆர். எஸ். என். இராயர் மடிக்கணினிகள் வழங்கினார்.
இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம், மேற்கல்வி தொடரும் மாணவர்களுக்குக் கல்வி சமத்துவத்தையும், தொழில்நுட்ப திறன்களையும் மேம்படுத்தும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.
“இந்த மடிக்கணினிகள் மாணவர்களின் கல்வி பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைக்கின்றன. இணையவழி கற்றல், வகுப்புப்பணிகள், ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வசதிக்குறைவான பின்னணியிலிருந்து வருகிற மாணவர்களுக்கு இது பெரும் ஆதரவாக இருக்கும்.”

“இன்றைய காலக்கட்டத்தில், இணையமும் மடிக்கணினி வசதியும் மாணவர்களின் அடிப்படை கல்வித் தேவையாக மாறியுள்ளது. இதன் மூலம் அவர்கள் அறிவியல், கணிதம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தங்களைத் திறம்பட வளர்த்துக்கொள்ள முடிகிறது,” என ஆர்.எஸ்.என். இராயர் நம்பிக்கை தெரிவித்தார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகள், அவர்களது எதிர்காலத்தை திறக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாக திகழ்கிறது. அதோடு, பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.