புக்கிட் மெர்தாஜாம் – பிறை பகுதிகளில் அடிக்கடி ஏற்பட்டு வரும் வெள்ளம் மற்றும் திடீர் வெள்ளப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, மழைநீர் வடிகால் கால்வாய்களைச் சுத்தம் செய்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், முழுமையான தொழில்நுட்ப அடிப்படையிலான நீண்டகாலத் தீர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் பொன்னுதுரை வலியுறுத்தினார்.
பிறை பகுதியில் வெள்ளம் ஏற்படும் முக்கிய இடங்களை அடையாளம் கண்டு, அப்பகுதிகளின் வடிகால் அமைப்பின் சாய்வு அளவு (gradient), அடித்தள மட்டம் (invert level), நீர்வெளியேற்றத் திறன், பம்ப் அமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புத் திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என அவர் செபராங் பிறை மாநகர் கழகத்திடம் (எம்.பி.எஸ்.பி) கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, சில பகுதிகளில் வடிகால் கால்வாய்கள் தாழ்வான நிலையில் அமைந்துள்ளதால், மழைநீர் ஈர்ப்பு விசையின் மூலம் முறையாக வெளியேற முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கனமழையின்போது குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளிலிருந்து அதிகளவிலான நீர் வடிகால் அமைப்புக்குள் பாய்கிறது. இந்நிலையில், போதிய சாய்வு இல்லாவிட்டால் நீர் மெதுவாக வெளியேறி தேங்குவதுடன், சில சந்தர்ப்பங்களில் பின்னோக்கிப் பாயும் நிலையும் ஏற்படக்கூடும், என்றார்.
எனவே, வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள வடிகால் அமைப்புகளின் அடித்தள மட்டம் மற்றும் சாய்வு குறித்து எம்.பி.எஸ்.பி பொறியியல் துறை விரிவான தொழில்நுட்ப ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வெள்ளப் பிரச்சனைக்கான உண்மையான காரணம் வடிகால் அமைப்பின் சாய்வு குறைபாடாக இருந்தால், கால்வாய்களைச் சுத்தம் செய்வது மட்டும் நீண்டகாலத் தீர்வாக அமையாது என்றும் பொன்னுதுரை சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, பிறை பகுதியில் அடையாளம் காணப்பட்ட அனைத்து வெள்ளப் பாதிப்பு பகுதிகளையும் கட்டம் கட்டமாக வெள்ளத் தடுப்புத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
எம்.பி.எஸ்.பி மற்றும் மலேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்) இணைந்து, பிறை பகுதியில் உள்ள அனைத்து வெள்ளப் பாதிப்பு பகுதிகளையும் மறுமதிப்பீடு செய்து, ஒவ்வொரு இடத்துக்கும் தேவையான தொழில்நுட்பத் தீர்வைத் தனித்தனியாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சில பகுதிகளில் சாய்வு பிரச்சனை காரணமாக வடிகால் அமைப்புகளை மேம்படுத்தவோ அல்லது மறுகட்டமைக்கவோ வேண்டியிருக்கலாம். மற்ற சில பகுதிகளில் தற்போதைய நீர்வெளியேற்றத் திறன் போதுமானதாக இல்லாததால், பெரிய கால்வாய்கள் அல்லது பருவமழை வடிகால்கள் அமைக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
அதேவேளையில், தாழ்வான பகுதிகளில் நீரை முழுமையாக ஈர்ப்பு விசையின் மூலம் வெளியேற்ற முடியாத சூழலில், புதிய பம்ப் நிலையங்களை அமைப்பது அல்லது தற்போதுள்ள பம்ப்களின் திறனை அதிகரிப்பது அவசியமாக இருக்கலாம், என்றார்.
ஒவ்வொரு வெள்ளப் பாதிப்பு பகுதிக்கும் தேவையான பணிகள், முன்னுரிமை, மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு ஆகியவை தெளிவாகத் திட்டமிடப்பட வேண்டும் என தமது தொகுப்புரையில் பொன்னுதுரை கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, ஈர்ப்பு விசையின் மூலம் நீரை வெளியேற்ற முடியாத பகுதிகளில் ஜே.பி.எஸ் இன் பம்ப் அமைப்புகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொருத்தமான இடங்களில் மின்சார அடிப்படையிலான நவீன பம்ப் அமைப்புகளை கட்டம் கட்டமாக மேம்படுத்துவது குறித்து எம்.பி.எஸ்.பி மற்றும் ஜே.பி.எஸ் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பம்ப் அமைப்புகளை மேம்படுத்தும்போது, அதன் திறன், நீரோட்ட அளவு, நீர்த் தேக்கத் தொட்டி கொள்ளளவு, தானியங்கி கட்டுப்பாட்டு வசதி, மின்சார ஆதாரம், மாற்று மின்சார வசதி, பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுச் செலவு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் தொழில்நுட்ப ஆய்வில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இறுதியாக, பிறையின் வெள்ளப் பிரச்சனையை ஒரு தனிப்பட்ட கால்வாய் பிரச்சனையாகக் கருதாமல், முழுமையான நீர்ப்பிடிப்பு மற்றும் வடிகால் அமைப்பின் அடிப்படையில் அணுக வேண்டும் என பொன்னுதுரை வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வெள்ளப் பாதிப்பு பகுதிக்கும் தெளிவான தீர்வுத் திட்டம், முன்னுரிமை, மதிப்பிடப்பட்ட செலவு மற்றும் செயல்படுத்தும் காலக்கெடு ஆகியவை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளம் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, வெள்ள அபாயத்தை முன்கூட்டியே குறைக்கும் வகையில் உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
“மழையின் அளவை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், சரியான சாய்வு, போதுமான வடிகால் கொள்ளளவு, திறமையான பம்ப் அமைப்பு மற்றும் திட்டமிட்ட வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மூலம் வெள்ள அபாயத்தை நிச்சயமாகக் குறைக்க முடியும்,” என பொன்னுதுரை வலியுறுத்தினார்.
மக்களின் வீடுகள், உடைமைகள், வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் வெள்ளப் பிரச்சனைக்கு நீண்டகாலத் தீர்வை வழங்க, எம்.பி.எஸ்.பி, ஜே.பி.எஸ் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.