அரசு சாரா இயக்கங்கள் இரத்த தான முகாம்  வழிநடத்த முனைப்புக் காட்ட வேண்டும் – தர்மன்

ஜார்ச்டவுன் – இளைஞர் பகுதி மலேசிய இந்து சங்கம் புக்கிட் பெண்டேரா பேரவையின் ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் இனிதே நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியினை புலாவ் தீக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்தோபர் லீ  அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். 

“மலேசிய இந்து சங்க ஏற்பாட்டில்  இத்திட்டம் தேசிய மற்றும் மாநில ரீதியிலும் இளைஞர் பிரிவின் தலைமையில்  ஒரு மாத காலவரையறையில் நடத்தப்படுகிறது. பினாங்கு மாநில ரீதியில் இதுவரை 23 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 1016 யூனிட் இரத்த தானம் பெறப்பட்டன,” என மலேசிய இந்து சங்க பினாங்கு மாநில துணைப் பொருளாளரும் புக்கிட் பெண்டெர பேரவையின் தலைவருமான தர்மன் கூறினார். 

இந்த முகாமில் இரத்த தானம் மட்டுமின்றி உடல் உறுப்பு தானத்திற்கான பதிவும் இடம்பெற்றது. ஜெலுத்தோங், லோத்தஸ் பினாங்கு பேரங்காடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய 74 பங்கேற்பாளர்கள் இரத்த தானமும் 2 பேர் உடல் உறுப்பு தானத்திற்கான பதிவும் செய்தனர். 

தற்போதைய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கத்தின் போது இந்த இரத்த தான முகாமில் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் உணவு விநியோக தொழிலாளர்களை இதில் பங்கேற்க ஊக்கமளிக்கும் வகையில் நற்சான்றிதழ் மற்றும் ரிம10 மதிக்கத்தக்க பெட்ரோல் பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டன. 

அரசு சாரா இயக்கங்கள் பொது மருத்துவமனைகளில் இரத்த வங்கியை நிரப்பும் பொருட்டு இம்மாதிரியான முகாம்கள் வழிநடத்த முனைப்புக் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். 

தானத்திலே சிறந்த தானம்  அன்னதானம் மற்றும் இரத்த தானமாகும். இந்த இரத்த தானமானது பொது மக்களின் உயிரைக் காக்கும் வல்லமை கொண்டது. 

பொது மக்களிடையே இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மேலோங்க இம்மாதிரியான முகாம்கள் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்த முகாம் இந்து சங்க இளைஞர் பிரிவின் கீழ் வழிநடத்தப்படுவது பாராட்டக்குறியதாகும்.  இம்மாதிரியான முகாம்கள் இளைஞர்கள் சமூகத்திற்குத் தொண்டாற்ற ஒரு சிறந்த களமாகத் திகழ்கிறது. இளைஞர்களின் பங்களிப்பு ஒரு சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வித்திடும்,” என சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்தோபர் லீ கூறினார். 

இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநகர் கழக கவுன்சிலர் ஹரி கிருஷ்ணன்; லோத்தஸ் பினாங்கு பேரங்காடியின் பொது மேலாளர் ரமேஸ்; மற்றும் புக்கிட் பெண்டேரா பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அண்மையக் காலமாக கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தினால் அதிகமான இரத்த தான முகாம்கள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் பொது மருத்துவமனைகளில்  இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை நிலவுகிறது. 

இத்திட்டம் ஒன்பதாவது ஆண்டாக வெற்றிக்கரமாக நடத்தப்படுகிறது. மேலும், பொது மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் உடல் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் முன்னோடியாக அமையும் என மேலும் தெரிவித்தார்.