ஆந்திரப் பிரதேசத்துடன் ஆழமான ஒத்துழைப்புக்கு பினாங்கு தயார் – முதலமைச்சர்

img 20260829 wa0041

ஜார்ச்டவுன் – இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்துடன், குறிப்பாக குறைக்கடத்தித் (Semiconductor) தொழில்துறையில், மேலும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்த பினாங்கு தயாராக இருப்பதாக மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் தெரிவித்தார்.

  1. மலேசிய தெலுங்கு சமூக அமைப்பின் (TAM) 70ஆம் ஆண்டு நிறைவு விழா பினாங்கில் நடைபெற்றதைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.

பினாங்கும் ஆந்திரப் பிரதேசமும் குறைக்கடத்தித் தொழில்துறையில் முக்கியப் பங்காற்றி வருவதால், இரு மாநிலங்களுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சாவ் கூறினார்.

“உங்கள் மாநிலத்தில் குறைக்கடத்தித் துறை மிகவும் வலுவாக இருப்பதாக அறிந்தேன். பினாங்கும் மலேசியாவின் முக்கியமான குறைக்கடத்தி மையங்களில் ஒன்றாக உள்ளது.

“எனவே, இரு தரப்பும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை நாம் ஆராயலாம். உங்கள் மாநிலத்திற்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் நான் பரிசீலிப்பேன்,” என்று பினாங்கு வாட்டர்ஃபிரன்ட் கன்வென்ஷன் மையத்தில் (PWCC) நடைபெற்ற 70ஆம் ஆண்டு நிறைவு விழாவைத் தொடக்கி வைத்து அவர் கூறினார்.

பினாங்கு பல்லின, பல கலாசாரங்கள் மற்றும் பல சமயங்களைச் சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் மாநிலமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட சாவ், தெலுங்கு சமூகமும் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக பினாங்கின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

“தெலுங்கு சமூகமும் பினாங்கில் உள்ள ஏனைய சமூகங்களுடன் இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்ந்து, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது,” என்றார்.

கல்வி, மருத்துவம், வர்த்தகம் மற்றும் பொது சேவை உள்ளிட்ட துறைகளில் தெலுங்கு சமூகத்தினர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தங்களது மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தையும் தொடர்ந்து பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பு தனது 70ஆம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த சாவ், இந்த மைல்கல் பல தலைமுறைகளாக மலேசியத் தெலுங்கு சமூகத்தினர் தங்களது அடையாளத்தைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு சான்றாகும், என்றார்.

1956ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவில் உள்ள தெலுங்கு சமூகத்தினரை ஒன்றிணைத்து அவர்களின் நலன்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தளமாகச் செயல்பட்டு வருகிறது.

தற்போது நாடு முழுவதும் சுமார் 30 தெலுங்கு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

மலேசியாவில் தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 400,000 முதல் 500,000 வரை இருப்பதாகவும், அவர்களில் சுமார் 10,000 பேர் பினாங்கில் வசிப்பதாகவும் சாவ் தெரிவித்தார்.

“உங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பினாங்கின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என நான் நம்புகிறேன். மாநிலத்தின் வளர்ச்சியில் உங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

இன்றைய காலக்கட்டத்தில், இளம் தலைமுறையினரிடையே தெலுங்கு மொழியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் சாவ் வலியுறுத்தினார்.

ஒரு காலத்தில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தெலுங்கு மொழிக் கல்வி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது இத்தகைய கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இளம் தலைமுறையினர் தெலுங்கு மொழி, கலாசாரம் மற்றும் சமூக வரலாற்றைக் கற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காக சங்கங்கள் வகுப்புகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாநில அரசு தெலுங்கு மொழி வகுப்புகளை நடத்துவதற்காக
ரிம30,000 நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது 70ஆம் ஆண்டு நிறைவு விழாவை நடத்துவதற்கு பினாங்கைத் தேர்ந்தெடுத்ததற்கும் சாவ் நன்றி தெரிவித்ததுடன், மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகளை வரவேற்றார்.

மேலும், இந்தக் கொண்டாட்டத்திலும் நாளை தொடங்கவுள்ள ஆசிய-பசிபிக் தெலுங்கு கூட்டமைப்பு மாநாட்டிலும் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து வந்துள்ள வெளிநாட்டு விருந்தினர்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தெலுங்கு புலம்பெயர் சமூகத்தினர் தங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும், மொழி மற்றும் கலாசாரத்தைப் பாதுகாக்கவும், தாங்கள் வசிக்கும் நாடுகளில் வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும் இந்த மாநாடு முக்கிய தளமாக அமையும் என சாவ் தெரிவித்தார்.

70ஆம் ஆண்டு நிறைவு விழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.வெங்கட பிரதாப் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் சாவ் வாழ்த்து தெரிவித்ததுடன், ஆசிய-பசிபிக் தெலுங்கு கூட்டமைப்பு மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதனிடையே, டாக்டர் வெங்கட பிரதாப், மலேசியாவில் தெலுங்கு சமூகத்தினர் தங்களது மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருவதாகக் கூறினார்.

“எமது முன்னோர்கள் தங்களது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக எதிர்கொண்ட போராட்டங்களையும் செய்த தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் இந்த அமைப்பு தனது 70ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது,” என்றார்.

சமூகத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆந்திரப் பிரதேசத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME), கிராமப்புற வறுமை ஒழிப்பு சங்கம் (SERP), வெளிநாடு வாழ் இந்தியர்களின் புலம்பெயர் விவகாரங்கள் மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ஸ்ரீ கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ் காரு, மக்கள் முற்போக்குக் கட்சி (PPP) தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

img 20260829 wa0043

img 20260829 wa0054