இந்துதர்ம மாமன்றம் சமயக் கல்வி புகட்டும் வழிகாட்டியாகத் திகழ்கிறது

வெற்றிப்பெற்ற மாணவர்களுடன் இந்து தர்ம மாமன்றத் தலைவர்கள் மற்றும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய நிர்வாக உறுப்பினர்கள்
வெற்றிப்பெற்ற மாணவர்களுடன் இந்து தர்ம மாமன்றத் தலைவர்கள்

பிறை – “நன்னெறி மற்றும் இந்து சமயம் புதிர்ப்போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சமயக் கல்வியை ஊக்குவிப்பதோடு நன்னெறிப் பண்புகளைப் பின்பற்றி சிறப்புடன் வாழ துணைபுரிகிறது, ” என இந்துதர்ம மாமன்ற பினாங்கு மாநிலத் தலைவர் நந்தகுமார் வரவேற்புரையில் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக நடைபெறும் இந்தப் புதிர்ப்போட்டி பினாங்கு மாநில இந்துதர்ம மாமன்றம், பிறை, ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய மற்றும் இந்திய சமூக பொருளாதார மேம்பாடுப் பிரிவு (Sedic) இணை ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு அதிகாரி சிங்காரவேலு, பினாங்கு மாநில இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கத் தலைவரும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவருமான டத்தோ கோபாலகிருஷ்ணன், மலேசிய இந்து தர்ம மாமன்றத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்துதர்ம மாமன்றம் மற்றும் ஜாலான் பாரு, ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பினாங்கில் அமைந்திருக்கும் 28 தமிழ்ப்பள்ளிகளிலும் சமய வகுப்புகள் நடைபெறுகின்றன. இந்த வகுப்புகள் இடம்பெற நிதியுதவி வழங்கி வரும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் செயல் பாராட்டக்குறியதாகும். மேலும் இந்த ஆலய நிர்வாகத்தினர் இந்து சமயம் மட்டுமின்றி சமூகம் சார்ந்த நிகழ்வுகளும் நடத்தி வருகின்றனர்.

இப்புதிர்ப்போட்டி படிநிலை 1, படிநிலை 2 என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த இரு பிரிவுகளிலும் பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளில் 225 மாணவர்கள் போட்டியில் பங்கெடுத்தனர். இந்நிகழ்வில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்குப் பிரத்தியேகமாக வர்ணம் தீட்டும் போட்டியும் இடம்பெற்றது.

இப்புதிர்ப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் மாமன்றம் தயாரித்து பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ள 4 இந்து தர்ம பாடநூல்களையும் பயிற்றிகளையும் (modules) அடிப்படையாகக் கொண்டு கேட்கப்படும். இதன் மூலம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்து மதத்தை பற்றி அறிந்துகொள்ள சிறந்த களமாக அமைகிறது.

அடுத்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்களில் இப்புதிர்ப்போட்டியை நடத்த மாமன்றம் திட்டமிடவுள்ளது. அதுமட்டுமின்றி தேசிய அளவிலும் இப்புதிர்ப்போட்டியை நடத்த எண்ணியுள்ளதாகவும் மாமன்றத்தின் செயலாளர் தனபாலன் முத்துச் செய்திகள் நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் மேலும் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் ஒன்றாம் படிநிலைக்கான பிரிவில் அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளியும், இரண்டாம் படிநிலைக்கான பிரிவில் தாசெக் பெர்மாய் தமிழ்ப்பள்ளியும் வெற்றி வாகைச் சூடினர். அதேவேளையில் அனைத்துப் போட்டிகளிலும் சிறந்த புள்ளிகள் பெற்று மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி முதன்மை நிலை அடைந்து வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது.