நிபோங் திபால்: ஜாவி சட்டமன்றத் தொகுதியின் கீழ் அமைந்துள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சார்ந்த 150 மாணவர்களுக்கு, 2027ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ப்பள்ளி தொடக்க உதவியாகத் தலா ரிம100 மதிப்பிலான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்திற்காக நேஷன்கேட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மொத்தம் ரிம15,000 நிதியை ஒதுக்கியுள்ளது.
நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி தொடக்க உதவிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜேசன் ஹெங் மூய் லைய் இதனைத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு முதல் நேஷன்கேட் நிறுவனம் ஜாவி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அவர் கூறினார்.
இதுவரை, 2026ஆம் ஆண்டு வரையில், இத்தொகுதியின் கீழ் அமைந்துள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளுக்காக அந்நிறுவனம் மொத்தம் ரிம62,150 நிதியைச் செலவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு ‘Southern Rubber Works’ நிறுவனம் ரிம7,000 நிதி ஒதுக்கீடு செய்து, 150 ஜோடி பள்ளிக் காலணிகள் மற்றும் காலுறைகளை வழங்கியுள்ளது.
அதேவேளையில், நிபோங் திபாலில் உள்ள யவாத்தா பேரங்காடியும் மாணவர்களுக்கான பள்ளி தொடக்க உதவியாகத் தலா ரிம10 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை வழங்கிப் பங்களித்துள்ளது.
இத்தகைய உதவிகள், புதிய கல்வி ஆண்டைத் தொடங்குவதற்குத் தேவையான பள்ளிச் சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் பெற்றோருக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என ஜேசன் ஹெங் தெரிவித்தார்.
“கல்வி என்பது தனிமனித வாழ்க்கையிலும் சமூகத்தின் முன்னேற்றத்திலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தரமான கல்வியும் முறையான வழிகாட்டுதலும் கிடைத்தால், மாணவர்கள் தங்களின் இலக்குகளையும் கனவுகளையும் நனவாக்க முடியும்.
“எனவே, இளம் வயதிலிருந்தே திறமையான மாணவர்களை உருவாக்குவதற்கு நாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி மற்றும் இணைப்பாட நடவடிக்கைகளில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கு இத்தகைய உதவிகள் ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

மேலும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கு ஆதரவளித்த மூன்று நிறுவனங்களுக்கும் அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஜாவி சட்டமன்றத் தொகுதியின் கீழ் அமைந்துள்ள ஐந்து தமிழ்ப்பள்ளிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.