குப்பையற்ற மலை திட்டம் பொது மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிப்பு

Admin
c1177e59 f074 4d28 aab3 f86bd168f71b

 

ஆயிர் ஈத்தாம் – கடந்த சில ஆண்டுகளாக கொடிமலை பகுதியில் நடைபெற்று வரும் ‘Trash Free Hill (TFH)’ திட்டத்தின் போது சேகரிக்கப்படும் குப்பையின் அளவு தொடர்ந்து குறைந்து வருவது, இந்த திட்டம் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த திட்டம் மலையை சுத்தமாகவும், பசுமையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டிய பொறுப்பை மக்களிடம் உணர்த்துகிறது என்றும் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

கொடிமலையை குப்பையின்றி வைத்திருக்க முனைப்புடன் ஆறு ஆண்டுகளாக செயல்படும் TFH குழுவின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

““இந்த திட்டத்தின் மூலம், மலை ஏறும் போது அங்குள்ள குப்பைகளை அகற்றி, மலையை மற்ற பயணிகளுக்கும் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க நாம் உதவுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “ப்ளோகிங்” (Plogging) எனப்படும் நடைபயிற்சியுடன் குப்பைகளை சேகரிக்கும் செயல்பாடும் ஒரு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. இது இன்றைய காலத்தில் அதிகரித்து வரும் மனநல அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு “Trash Free Hill (TFH)” திட்டம் 6-வது முறையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ஜூன்,21 அன்று காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெறும். அனைத்து பங்கேற்பாளர்களும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியை கொடிமலை கோர்ப்பரேஷன் ஏற்பாடு செய்கிறது.

பங்கேற்பதற்கான பதிவு இன்று தொடங்கி மார்ச்,8 வரை PHC-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இலவசமாக மேற்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி ‘மூன்கேட்’ நுழைவு A & B, பினாங்கு தாவரவியல் பூங்கா, ஜீப் பாதை, கீழ் நிலையம்/பாரம்பரிய பாதை, ஹை கீட் எஸ்டேட் மற்றும் ஜாலான் ஆயிர் ஈத்தாம் ஆகிய ஏழு முக்கிய மலையேற்றப் பாதைகளை உள்ளடக்கியதாகும்.

PHC வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஆண்டு கொடி மலை பகுதியில் உள்ள ஏழு நடைபாதைகளில் இருந்து 170 கிலோக்கும் மேற்பட்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இது 2024 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட 200 கிலோவை விட குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அதிகரித்து வருவதை காண முடிகிறது.

TFH 2026 நிகழ்ச்சியில் சுமார் 1,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராட்டுதலின் அடையாளமாக, ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் ஒரு TFH 2025 கிட், ஒரு மின் சான்றிதழ் மற்றும் PHC இன் ஐஸ் கச்சாங் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

மேலும், சியோக் லய் லியொங் அவர்கள் கூறியதாவது, கொடிமலை கோர்ப்பரேஷன் கட்டிடங்களில் இரண்டிற்கு பசுமை கட்டிட (GBI) சான்றிதழ் கிடைத்துள்ளது. இது மலை உச்சியில் அமைந்த கட்டிடங்களுக்கு கிடைக்கும் முதல் சான்றிதழ் ஆகும்.

இந்த முயற்சி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மக்களிடையே பசுமை விழிப்புணர்வை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பினாங்கு கொடி மலை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலம் என்பதை விட அது பினாங்கின் அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் சின்னமாக விளங்குகிறது.

அதனை சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் பொறுப்பாகும், மேலும் அதன் அழகைப் பாதுகாக்க நாம் அனைவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும்.