சமூகநலத் திட்டங்கள் & RIBI நிதியுதவி தொடர்ந்து வழங்கப்படும் – ஜெக்டிப்

Admin

 

டத்தோ கெராமாட் – பினாங்கு மாநிலத்தில் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தளங்களின் நலன் மற்றும் மேம்பாடு குறித்து கவனம் செலுத்தப்படும்.  தற்போது எதிர்நோக்கும் சுகாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ கூறுகையில், இன்றுவரை முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தளங்களின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரிம8.11 மில்லியன் முஸ்லீம் அல்லாத வழிபாட்டு அறக்கட்டளை நிதியம் (ரிபி) மூலம் வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டார்.

“தற்போது அதிகமான வழிபாட்டு தளங்களுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. ஏனெனில், கோவிட்-19 தாக்கத்திற்கு முன்னர் வழிபாட்டு தளங்களுக்கு வருகையளிக்கும் பக்தர்கள் மூலம்  நன்கொடைகள் பெறப்பட்டன.

“மாநில அரசு இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, தேவைப்படும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தளங்களுக்கு விண்ணப்பங்கள் மூலம் நிதிகளை
தொடர்ந்து பகிர்ந்தளிக்க உதவும்.

“இஸ்லாமிய வழிபாட்டு தளங்களுக்கு (பினாங்கு இஸ்லாமிய மதக் கவுன்சில், MAINPP) மூலம் நிதி வழங்கப்படும்,” என்று ஜெக்டிப் ஜாலான் ஸ்ரீ பஹாரி, ஸ்ரீ ஐயப்பன் சேவா சமாஜம் நல அமைப்பின் வளாகத்தில் நடைபெற்ற தனித்துவாழும் தாய்மாருக்கான தீபாவளி பரிசுக்கூடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஐயப்பன் சேவா சமாஜம் நல அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நம்பிக்கை கூட்டணி (முன்பு மக்கள் கூட்டணி) 2008-இல் பினாங்கு மாநில ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு,  பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று RIBI அறக்கட்டளை நிதியம்  2016-இல் அறிமுகப்படுத்தப்பட்டு  பினாங்கு மாநில வரவு செலவில் ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மத விவகாரங்களுக்கு 2021 இல் ரிம64.16 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப், 60 தகுதிப்பெற்ற தனித்துவாழும் தாய்மார்களுக்கு தீபாவளிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அடிப்படைத் தேவைகளுக்கான உணவுக்கூடை பொட்டலங்களை  வழங்கினார்.

கடந்த 13 ஆண்டுகளாக, டத்தோ கெராமாட் சட்டமன்ற தொகுதியில் தகுதியானவர்களுக்கு இந்தப் பங்களிப்பு தொடர்ந்து வழங்கப்படுகிறது.

“இந்த பங்களிப்பு சிறியதாக இருந்தாலும், அது  கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும். அதோடு, இத்திட்டம் செயல்படுத்த ரிம7,000  நிதி வழங்கியதாக,” ஜெக்டிப்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஜெக்டிப் அனைத்து தரப்பினரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஓ.பி) தொடர்ந்து கடைப்பிடிப்பதோடு தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதை உறுதிசெய்ய முடியும் என கேட்டுக்கொண்டார்.

“முன்னதாக, பினாங்கு 100 நாட்களுக்கும் மேலாக நோய்த்தொற்று இல்லாத பசுமையான மாநிலமாக இருந்தது. பினாங்கு மக்கள் எஸ்.ஓ.பி-களை முறையாக பின்பற்றுவதன்  மூலம் மீண்டும் பசுமை மாநிலமாக உருவாகலாம்,”என்று ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் பினாங்கு மக்களுக்கு அறிவுறுத்தினார்.