செபராங் ஜெயா – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கோன் யோவ், செபராங் ஜெயா பொதுச் சந்தையில் வாடகைக் கட்டணத்தைக் குறைக்குமாறு வர்த்தகர்கள் விடுத்துள்ள கோரிக்கையை, செபராங் பிறை மாநகர் கழகத்திடம் (எம்.பி.எஸ்.பி) முன்வைப்பதாக தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ‘முதல்வருடனான சந்திப்பு’
நிகழ்ச்சியின் போது, தற்போதைய வாடகைக் கட்டணங்கள் குறித்து வர்த்தகர்கள் கவலை தெரிவித்ததாகவும், குறிப்பாக வார நாட்களில் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டியதாகவும் சாவ் கூறினார்.

“வர்த்தகர்கள் அனைவரும் பொதுவாக ஒரே பிரச்சனையைத்தான் எழுப்பியுள்ளனர். இதுவே அவர்களின் சங்கத்தின் நிலைப்பாடாகவும் உள்ளது. வாடகைக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அவர்கள் மாநகர் கழகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்,” என்றார்.
கம்பி வலைகளுடன் கூடிய கடைகளுக்கு தற்போது மாதம் ரிம300 வாடகையும், திறந்தவெளி கடைகளுக்கு ரிம165 வாடகையும் வசூலிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனினும், வர்த்தகர்கள் வாடகையை முழுமையாக ரத்து செய்யக் கோரவில்லை என்றும், வாடிக்கையாளர் வருகை குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு வாடகையில் சிறிய அளவிலான குறைப்பை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் சாவ் குறிப்பிட்டார்.
“அவர்கள் குறிப்பிட்ட சதவீதத்தில் குறைப்பு வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு சிறிய குறைப்பை மட்டுமே கோருகின்றனர். அதேவேளையில், வர்த்தகர்களாக தங்களுக்கும் சில பொறுப்புகளும் கடமைகளும் இருப்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். வாடகையை முழுமையாக ரத்து செய்யுமாறு அவர்கள் கோரவில்லை. சில சதவீத குறைப்பு குறித்து பரிசீலிக்கலாம்,” என்றார்.
செபராங் ஜெயா பொதுச் சந்தை மற்றும் சிறு வணிகர் வளாக வர்த்தகர்கள் சங்கத்திடமிருந்து கோரிக்கை மனுவைப் பெற்ற பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், கடையின் வகை மற்றும் வழங்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப சந்தைகளில் வாடகைக் கட்டணங்கள் மாறுபடும் என்று சாவ் விளக்கமளித்தார்.
செபராங் ஜெயா சந்தை புதிதாகக் கட்டப்பட்டதால், தற்போதைய வாடகைக் கட்டணங்கள் மாநகர் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டவை என்றும், இருப்பினும் இந்த விவகாரம் குறித்து எம்.பி.எஸ்.பி விரிவாக ஆய்வு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.
செபராங் ஜெயா சந்தைக்கு நீண்ட வரலாறு உள்ளதாகத் தெரிவித்த மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ், மறுமேம்பாடு செய்யப்படுவதற்கு முன்னர் பல தசாப்தங்களாக அதே இடத்தில் பழைய சந்தை செயல்பட்டு வந்ததாகக் கூறினார்.
பழைய சந்தைக் கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்ததுடன், சந்தைக்கு வெளியே உரிமம் பெறாத வர்த்தகர்கள் செயல்பட்டு வந்ததையும் கருத்தில் கொண்டு, மாநில அரசும் பினாங்கு மேம்பாட்டுக் கழகமும் (பி.டி.சி) இணைந்து சந்தையை மீண்டும் கட்ட முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.
“சந்தை மீண்டும் கட்டப்பட்டபோது, வர்த்தகர்கள் பி.டி.சி-க்குச் சொந்தமான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு தற்காலிகச் சந்தை அமைக்கப்பட்டது. அந்தத் தற்காலிகச் சந்தை சிறப்பாக அமைந்திருந்ததால், பழைய இடத்திற்குத் திரும்பாமல் அங்கேயே தொடர்ந்து செயல்படலாம் என்று சில வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தனர்,” என்றார்.
புதிய சந்தையில் அதிக இடவசதியுடன் கூடுதல் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சாவ், வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் வசதியான வணிகச் சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றார்.
எனினும், முன்பு உரிமம் பெறாமல் செயல்பட்ட வர்த்தகர்களுக்காக அமைக்கப்பட்ட கடைகள் உட்பட, அதிக எண்ணிக்கையிலான கடைகள் இருப்பது சில சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
குறிப்பாக, சில கடைகளில் ஒரே வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், வர்த்தகர்களிடையே போட்டி அதிகரிக்கக்கூடும் என்றும் சாவ் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாநில டி.ஏ.பி. தலைவர் ஸ்டீவன் சிம், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், சுங்கை புயு சட்டமன்ற உறுப்பினர் ஃபீ சின் ட்சே மற்றும் புலாவ் திக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோசுவா வூ ஸே ஜெங் ஆகியோருடன் இணைந்து, சந்தைக்கு வந்த பொதுமக்கள் மற்றும் உணவுக்கடை வாடிக்கையாளர்களுடன் சாவ் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி.எஸ்.பி. கவுன்சிலர்களான பொன்னுதுரை, லிங்கேஸ்வரன், யோகன் ராஜ் தேவர் மற்றும் ஊய் யோங் வெய் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.