பட்டர்வொர்த் – ஜாலான் சென் ஃபெர்ரி மற்றும் ஜாலான் லிம்புங்கான் பகுதிகளைச் சுற்றியுள்ள ஜாலான் பெர்செக்குத்துவான் FT001-ன் சீரமைப்புப் பணிகள் 85 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில், இப்பணிகள் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிம2.36 மில்லியன் மதிப்பிலான இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 25ஆம் தேதி பணிகள் தொடங்கியதாக பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜாலான் பாகான் லுவார் பகுதியில் ஏற்கனவே ரிம1.6 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜாலான் பெர்செக்குத்துவான் FT001-ஐ மேம்படுத்துவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டாவது திட்டம் இதுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இத்திட்டத்தின் கீழ் மூன்று இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் இடம் 831 மீட்டர் நீளமுடையது. இது துங்கு அப்துல் ரஹ்மான் பாலத்திலிருந்து தாமான் லிம்புங்கான் சந்திப்பு வரை நீடிக்கிறது.
“இரண்டாவது இடம் ஷெல் சென் ஃபெர்ரி சந்திப்பிலும், மூன்றாவது இடம் தாமான் மேவா மற்றும் ஹார்பர் பிளேஸ் சந்திப்புகளிலும் அமைந்துள்ளது. குறிப்பாக, மூன்றாவது பகுதியில் ஏற்பட்டுள்ள சாலைத் தாழ்வு, முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பயன்பாட்டுச் சேவைப் பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது,” என்றார்.
இத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மீதமுள்ள 15 விழுக்காட்டுப் பணிகளில் சாலைப் பாதைக் கோடுகளை வரைவது மற்றும் சாலைப் பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் அடங்கும் என்றார்.
அவரது கூற்றுப்படி, ஜாலான் பெர்செக்குத்துவான் FT001 பினாங்கு துறைமுகம் மற்றும் இலகுரகத் தொழில் மண்டலங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக விளங்குகிறது. எனவே, இச்சாலையைப் பராமரித்து மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.
“இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு விண்ணப்பம் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்படுவதற்கு உதவிய பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இந்தச் சாலை மேம்பாட்டுப் பணிகள் மூலம், சாலைப் பயனாளர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
இதற்கிடையில், வடக்கு செபராங் பிறை பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்.) சாலைப் பொறியாளர் அஸ்னா பஹாரி, மீதமுள்ள 15 விழுக்காட்டுப் பணிகள் திட்டமிட்டபடி நிறைவடையும் எனத் தெரிவித்தார்.
“மீதமுள்ள பணிகளில் சாலைப் பாதைக் கோடுகளை வரைவது மற்றும் சாலைப் பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது உள்ளிட்ட பணிகள் அடங்கும். முழுத் திட்டமும் இந்த அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம்.
“இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், சாலைப் பயனாளர்களுக்கு கூடுதல் வசதியை வழங்கும் என நம்புகிறோம்,” என்றார்.
இதற்கிடையில், பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி வழங்கிய ரிம2.36 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு, பாகான் பகுதியில் சாலைப் பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த ஆண்டு வழங்கப்பட்ட இரண்டாவது நிதி ஒதுக்கீடு என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தின் பணிகள் தற்போது 85 விழுக்காடு நிறைவடைந்துள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட நிதி விரைவாகச் சாலை மேம்பாட்டுப் பணிகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
“பொதுப்பணித் துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளதையும், பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் இருப்பதையும் இது நிரூபிக்கிறது,” என்றார்.
இந்நிகழ்வில், செபராங் பிறை மாநகர் கழக கவுன்சிலர் லிங்கேஸ்வரன் சர்மார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.