பிறை பிரிமா அமான் மின்தூக்கி சீரமைப்புக்கு ரிம20,000 நிதி ஒதுக்கீடு

Admin
fb img 1786844858702

பிறை – மாநில அரசாங்கம் பிறை இனாய் என்று பரவலாக அறியப்படும் பிரிமா அமான் அடுக்குமாடிக் குடியிருப்பில் பழுதடைந்த மின்தூக்கிகளின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அவற்றைப் பழுதுபார்த்து மேம்படுத்தும் பணிகளுக்கு ரிம20,000 நிதி ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

fb img 1786844874383

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் வகையில், பழுதுபார்ப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள ஏதுவாக அவசரகால நிதியிலிருந்து இந்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதாக பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு சோமு தெரிவித்தார்.

பினாங்கு மாநில வீடமைப்பு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘பினாங்கு அதிகபட்ச 80 விழுக்காடு பராமரிப்பு நிதித் திட்டம்’ (TPM80PP) மூலம், அடுக்குமாடிக் குடியிருப்பு கூட்டு மேலாண்மைக் குழு (JMB) ஏற்கெனவே இதற்கான நிதியுதவியைக் கோரி விண்ணப்பித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

fb img 1786844864224

அண்மையில் மின்தூக்கிகள் பழுதடைந்ததால், குடியிருப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அன்றாடப் பயன்பாட்டிற்கு ஒரு மின்தூக்கி மட்டுமே இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

“இந்த நிலைமை குடியிருப்பாளர்களுக்கு, குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மேல் தளங்களில் வசிப்போருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது,” என்று பிரிமா அமான் அடுக்குமாடிக் குடியிருப்பு நிர்வாகத்திடம் மின்தூக்கி பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கியபோது அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை, பிறை எம்.பி.கே.கே தலைவர் ஸ்ரீ சங்கர், பிரிமா இனாய் ஜே.எம்.பி தலைவர் டோன் பைஷால் பின் ஹாஜி ஜொஹாரி மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் கீழ், கூட்டு மேலாண்மைக் குழு (JMB) மொத்தச் செலவில் 20 விழுக்காடான ரிம4,000-ஐ ஏற்க வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ சுந்தரராஜு தெரிவித்தார்.

இருப்பினும், பிரிமா அமான் அடுக்குமாடிக் குடியிருப்பு பிறை சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, நிர்வாகத்தினர் மற்றும் குடியிருப்பாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், JMB ஏற்க வேண்டிய 20 விழுக்காட்டுப் பங்களிப்பான ரிம4,000-ஐ தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

“என்னைப் பொறுத்தவரை, மின்தூக்கிகள் போன்ற அடிப்படை வசதிகள் வெறும் வசதிகள் மட்டுமல்ல; அவை குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு, இயங்குதிறன் மற்றும் வாழ்க்கைத் தரத்துடன் நேரடியாகத் தொடர்புடைய அத்தியாவசியத் தேவைகளாகும்,” என்று அவர் கூறினார்.

குடியிருப்புப் பகுதிகள், குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள், முறையான கவனத்தையும் தேவையான உதவிகளையும் பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை பினாங்கு மாநில அரசும் பினாங்கு மாநில வீடமைப்பு வாரியமும் இணைந்து தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

“எங்களது அர்ப்பணிப்பு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை வழங்குவதில் மட்டுமல்லாமல், பராமரிப்புப் பணிகள், பொது வசதிகளைச் சீரமைத்தல் மற்றும் மக்களின் வசிப்பிடச் சூழலின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்,” என்று அவர் கூறினார்.