ஜெலுத்தோங் பொதுச் சந்தையின் அனைத்து வணிகர்களும் திரையிடல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – ஜெக்டிப்

Admin

 

பத்து லஞ்சாங் – ஜெலுத்தோங் பொதுச் சந்தையில் மொத்தம் 278 வணிகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள் மீண்டும் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் திரையிடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மலேசிய சுகாதார அமைச்சகத்திற்கு முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த சந்தையில் நான்கு வர்த்தகர்கள் கோவிட் -19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, உள்ளாட்சி, நகர்ப்புற & கிராமப்புற திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர், ஜெக்டிப் சிங் டியோ தெரிவித்தார்.

“ஜெலுத்தோங் பொதுச் சந்தை  மே,20  முதல் பின்னர் அறிவிக்கப்படும் தேதி வரை நெறிமுறை மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு மூலம் மூட உத்தரவிடப்பட்டது.

“எனவே, அனைத்து வணிகர்களும் மற்றும் அங்காடி வியாபாரிகள்  திரையிடல் சோதனை செய்து அதன் முடிவுகளை சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதன் வழி, பொதுச் சந்தை மீண்டும் திறக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்படும்,” என்று ஜெக்டிப் ஜெலுத்தோங் பொது சந்தைக்கு வருகையளித்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பத்து லஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஒங் ஆ தியோங், சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் குய் சீ சென், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் மற்றும் பினாங்கு மாநகர் கழக தலைவர் மேயர் டத்தோ இயூ துங் சியாங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெக்டிப் கூறுகையில், பட்டர்வொர்த் பகுதியில் அருகிலுள்ள பாகான் அஜாம் பொதுச் சந்தைக்குப் பிறகு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0 அமல்படுத்தப்பட்ட காலத்தில் மூட உத்தரவிடப்பட்ட இரண்டாவது சந்தை ஜெலுத்தோங் பொதுச் சந்தை ஆகும்.

“மார்ச் 18, 2020 முதல், உணவகங்கள், கட்டுமானத் தளங்கள் மற்றும் பொதுச் சந்தைகள் உட்பட 1,600 க்கும் மேற்பட்ட வளாகங்களை எம்.பி.பி, மலேசிய காவல்துறை மற்றும் பல அரசு நிறுவனங்களால் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

“மாநில அரசு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் கூறுகளுக்கு முன்னுரிமை வழங்குவது இந்த அமலாக்கத்தின் மூலம் நிரூபிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள்  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி) இணங்குவதை
உறுதி செய்யும்.

“கூடுதலாக, எஸ்.ஓ.பி-க்கு இணங்காத எந்தவொரு தரப்பிற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மேயர் (எம்.பி.பி.பி மற்றும் எம்.பி.எஸ்.பி) இருவருக்கும்  அறிவுறுத்தினேன்.

“எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கை மூலம் கோவிட்-19 தொற்று சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகளைத் தொடருவார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, ஜெலுத்தோங் பொதுச் சந்தையில்  துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக வும், கோவிட் -19 பரவுவதை தடுக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் மூடப்பட்டது என எம்.பி.பி.பி மேயர் கூறினார்.

அதே செய்தியாளர் சந்திப்பில், சில தரப்பினர்கள் பினாங்கு மாநில அரசு கோவிட்-19 தடுப்பூசி பிரச்சினையை அரசியல்மயமாக்க முற்படுவதாக கூறப்படுவதை முற்றாக மறுத்தார்.

பினாங்கு மாநிலத்தில் தடுப்பூசி திட்டங்கள் விரைவில் செயல்படுத்த உதவ மத்திய அரசு உட்பட அனைத்து தரப்புடன் இணைந்து பணியாற்ற மாநில அரசு தயாராக உள்ளது என்றார்.

“தடுப்பூசிகளின் கையிருப்பு கிடைக்கப்பெற்றால், தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு தனியார் துறை மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் பணியாற்ற  நாங்கள் தயாராக இருக்கிறோம்.

“எனவே, இந்த விவகாரம் அரசியல் மயமாக்கப்படுதல்  விரும்பவில்லை என்றால்,
சம்பந்தப்பட்ட அமைச்சரிடம்
தடுப்பூசிகளின் விநியோகத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், ”என்று ஜெக்டிப் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.