தைப்பூச இரத ஊர்வலத் தடை குறித்து மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும்

ஜார்ச்டவுன் – அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவின் போது இரத ஊர்வலத்திற்குத் தடை விதித்துள்ள  தனது முடிவை மறுபரிசீலனைச் செய்யுமாறு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சாதிக்கை பினாங்கு இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி கேட்டுக்கொண்டார்.

புதிய கோவிட்-19 ஓமிக்ரான் கிருமியின் அச்சுறுத்தல் காரணமாக இத்தடை விதிக்கப்பட்டதாக ஹலிமா கூறும் காரணத்தை ஏற்றுக்  கொள்ளமுடியவில்லை என இந்து அறப்பணி வாரியத் தலைவருமான இராமசாமி தெரிவித்தார்.

“நேற்று நாடாளுமன்ற அமர்வின் போது பத்துகஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் நாயுடு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது ஹலிமா இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த ஆண்டு தைப்பூசத்தில் இரத ஊர்வலம் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

“தைப்பூசத்தின் முக்கிய அம்சமான இரத ஊர்வலத்தை மறுக்கும் வகையில் ஹலிமா வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று இராமசாமி கொம்தாரில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

“கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்து அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தப் பிறகு, இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஹலிமா கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த சந்திப்புக் கூட்டமானது தைபூசக் கொண்டாட்டம் பற்றிய  இந்து தலைவர்களுடன் ஹலிமா நடத்திய   பொதுவான விவாதம் மட்டுமே, என்றார்.

“இரத ஊர்வலத்தை ரத்து செய்யும் ஆலோசனையை அவர்கள் ஆதரிக்கவில்லை அல்லது இரத ஊர்வலத்தை ரத்து செய்வதற்கான ஆணையை ஹலிமாவுக்கு வழங்கவில்லை என்று கருத்து தெரிவித்தார்.

“இரத ஊர்வலத்தை ரத்து செய்வதற்கு கலந்துரையாடலை  அடிப்படையாகப் பயன்படுத்தக் கூடாது.

தொற்றுநோயின் தாக்கம் குறையும் சூழல் ஏற்படும் போது தைப்பூச இரத ஊர்வலத்தை அனுமதிக்க வேண்டும், என்றார்.

“பெரும்பான்மையான மலேசியர்கள் இப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ள
தொடங்கியுள்ளனர். அதோடு, பொது மக்கள் ஊக்க மருந்தளவையும் பெற தொடங்கியுள்ளனர். தற்போது, தேசிய மீட்புத் திட்டத்தின் நான்காவது கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதில் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்த அனுமதித்துள்ளது.

“தேர்தல் நடத்தலாம் என்றால், இரத ஊர்வலம் நடத்துவதில் என்ன தவறு?

“ஹலிமாவின் நிலைப்பாட்டை மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB) மத்திய அரசின் உத்தரவை மீறுவதைத் தவிர வேறு வழியில்லை.

“அதே சமயம், இந்த அறிவிப்பின் பின்னணியில் அரசியல்  ஈடுபாடு இருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.

இதனிடையே, அமைச்சருடனான சந்திப்புக் கூட்டத்தில் இரத ஊர்வலத்திற்குத் தடை விதிப்பது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ  இராமச்சந்திரன் தெரிவித்தார்.

“கடந்த டிசம்பர் 2ஆம் நாள் சுமார் 3 மணி நேரம்  நடைபெற்ற  கூட்டத்திலும் இரத ஊர்வலத்திற்குத் தடை  விதிப்பு குறித்து விவாதம் ஏதும் நடைபெறவில்லை.

“மாறாக, சில நிபந்தனைகளுடன் இரத ஊர்வலத்திற்க அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

“எனவே, அமைச்சர் குறிப்பிடும் சம்பந்தப்பட்ட இந்து தலைவர்கள் யார் என்று  கேட்க விரும்புகிறேன், என இராமச்சந்திரன் மேலும் கூறினார்.