பினாங்கின் சுற்றுலா, பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வி-கன்வென்ஷன் மலேசியா 2026

Admin
v convention

பாயான் லெப்பாஸ் – பினாங்கு மாநிலம், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 8,000 பிரதிநிதிகளை வரவேற்று, வி-கன்வென்ஷன் மலேசியா 2026 என்ற அனைத்துலக மாநாட்டை நடத்தி வருகிறது. ஜூன் 17 முதல் 21 வரை நடைபெறும் இந்த ஐந்து நாள் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் பினாங்கு ஸ்பைஸ் அரங்கில் நடைபெறுகின்றன.

இம்மாநாடு மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹொன் வாய் தெரிவித்தார்.

மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், இந்த ஆண்டின் மாநாட்டு கருப்பொருளான “Reform. Perform. Transform.” (சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்) என்பது பினாங்கு மாநில அரசின் தொடர்ச்சியான முன்னேற்றம், புத்தாக்கம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது, என்றார்.

“பினாங்கு மாநிலம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, திறம்பட செயல்பட்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வலிமையான பொருளாதாரத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். இந்தக் கருப்பொருள் அந்த இலக்குகளை பிரதிபலிக்கிறது. சுற்றுலா, வணிக நிகழ்வுகள் மற்றும் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் முன்னணி மையமாக பினாங்கை மேலும் வலுப்படுத்தும் எங்கள் முயற்சிகளுடன் இது நேரடியாக இணைகிறது,” என்றார்.

மேலும், வி-கன்வென்ஷன் மாநாடு 16-ஆவது முறையாக பினாங்கில் நடைபெறுவது, அனைத்துலக அளவிலான பெரிய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தும் மாநிலத்தின் திறனை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

“30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள சுமார் 8,000 பிரதிநிதிகள் பினாங்கின் சுற்றுலாத் துறைக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பெரும் நன்மையை அளிக்கின்றனர். மாநாட்டின் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும்விடுதிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதனால் விடுதிகள், உணவகங்கள், அங்காடி வணிகங்கள், போக்குவரத்து சேவைகள் மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில்களுக்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது,” என அவர் கூறினார்.

பினாங்கை முன்னணி அனைத்துலக வணிக மையமாக உருவாக்குவதில் பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் (PCEB) ஆற்றிய பங்களிப்பை அவர் பாராட்டினார். அதேவேளை, மலேசியாவின் வணிகத் துறையின் போட்டித்திறனை உலகளவில் மேம்படுத்த தொடர்ந்து பாடுபட்டு வரும் மலேசியா மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் (MyCEB) மற்றும் மலேசியா சுற்றுலா அமைப்புகளுக்கும் அவர் நன்றித் தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள், பினாங்கின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள், பல இன மற்றும் பல கலாச்சார பாரம்பரியம், வளர்ந்து வரும் படைப்பாற்றல் பொருளாதாரம் மற்றும் உலகப் புகழ்பெற்ற உணவு வகைகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

v convention 2

வி-கன்வென்ஷன் மலேசியா 2026 மாநாடு, அனைத்துலக மாநாடுகள் மற்றும் வணிக நிகழ்ச்சிகளுக்கான விருப்பமான இடமாக பினாங்கின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.