ஜார்ச்டவுன் – இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, பினாங்கில் அங்கீகரிக்கப்படாத இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலங்களின் (ரிபி) எண்ணிக்கை சரிவு கண்டுள்ளது.
மாநில சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சியூ கிம், பினாங்கு மாநகர் கழகம் (எம்.பி.பி.பி) மற்றும் செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) மேற்கொண்ட தொடர்ச்சியான கண்காணிப்பு முயற்சிகளே இந்தச் சரிவுக்கான காரணம் என்று கூறினார்.
“இந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, எம்.பி.பி.பி பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத ரிபி தலங்களின் எண்ணிக்கை 115 ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் எம்.பி.எஸ்.பி பகுதியில் 21 தலங்களைப் பதிவு செய்துள்ளது
“2023 மற்றும் 2024 க்கு இடையில், எம்.பி.எஸ்.பி வட்டாரத்திற்குள் மொத்தம் 43 அங்கீகரிக்கப்படாத ரிபி தலங்கள் அடையாளம் காணப்பட்டன. அதே நேரத்தில் எம்.பி.பி.பி-இல் 149 தலங்களைப் பதிவு செய்தது.
“இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுக் காண்பதில் எங்கள் தரவு புதுப்பித்தல் மற்றும் கண்காணிப்பு முயற்சிகள் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் குறிக்கிறது,” என்று பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது பெர்மாத்தாங் பாசிர் சட்டமன்ற உறுப்பினர் அமீர் ஹம்சா அப்துல் ஹாஷிம் முகமது ஹாஷிமின் வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த லிம் இவ்வாறு கூறினார்.
எந்தவொரு கட்டமைப்பையும் கட்டுவதற்கு முன்னதாக அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதன் முக்கியத்துவத்தை விளக்க, மாநில அரசு ரிபி சங்கங்கள் உடனான அமர்வுகளை அதிகரிக்கும் என்று லிம் மேலும் கூறினார்.
“தொடக்க அணுகுமுறையாக, மாநில அரசு சங்கப் பதிவாளருடன் (ROS) நெருக்கமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளது.
“அனைத்து வழிபாட்டு தலங்களும் முறையாகத் தகவல்களைப் பதிவு செய்ய ஊக்குவிப்பதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது, இது ஒவ்வொரு ரிபி இன் அதிகாரப்பூர்வ பதிவைப் பராமரிக்க மாநிலத்திற்கு உதவும்,” என்று அவர் கூறினார்.
மேலும், அனைத்து ரிபி கட்டுமான அல்லது புதுப்பித்தல் திட்டங்களும் மாநிலத்தின் முழுமையான சேவை மையம் (OSC) மூலம் திட்டமிடல் அனுமதி மற்றும் கட்டிடத் திட்ட ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற தெளிவான கொள்கைகளை மாநில அரசு அறிமுகப்படுத்தும் என்று அவர் கூறினார்.
“இது போன்ற கட்டிடங்களின் வடிவமைப்பு, கட்டிடமைப்பு மற்றும் இருப்பிடம் சீரான கட்டிட துணைச் சட்டங்கள் (UBBL) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நில பயன்பாட்டுத் திட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும்” என்று லிம் விளக்கமளித்தார்.
தற்போது வரை, ஆறு ரிபி கட்டமைப்புகள், அதில் பெரும்பாலும் சிறிய கோவில்கள் மற்றும் மாநில இருப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறிய கட்டமைப்புகள் ஆகும். இது அமலாக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.