பினாங்கு டுரியான் அங்காடி வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்ய அனுமதி – ஜெக்டிப்

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநிலத்தில் உள்ள அனைத்து டுரியான் அங்காடி வியாபாரிகளும் வியாபாரத்தைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், வியாபாரிகள் அனைவரும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை (எஸ்.ஓ.பி) பின்பற்ற வேண்டியது அவசியம் என இன்று ரோரோங் சுசூவில் அமைந்திருக்கும் டுரியான் அங்காடி கடைக்கு வருகையளித்தப்போது வீடமைப்பு, ஊராட்சி, கிராமப்புற & நகர்ப்புற மேம்பாட்டு திட்டமிடல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் டியோ அறிவித்தார்.

“கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்தாலும்,
டுரியான் பழம் பருவக்காலத்தில் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும் என்பதால், இச்சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு இந்த வியாபாரிகளின் கோரிக்கைக்கு மாநில அரசு செவி மடுத்து இந்த அனுமதியை வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் முன்பு போன்று கடைகளிலேயே பழங்களை சுவைக்க அனுமதி இல்லை. மாறாக, வியாபாரிகள் விற்கப்படும் பழங்களை பொட்டலங்களில் (dupper ware) எடுத்துச் செல்லாம்”, என ஜெக்டிப் விவரித்தார்.

மாநில அரசு டுரியான் பழத்தின் பருவக் காலம் தொடங்கியவுடன் பினாங்கு மாநிலத்தில் உள்ள தீவுப்பபகுதியில் 9 பொதுச் சந்தைகளிலும் பெருநிலத்தில் 8 பொதுசந்தைகளிலும் இப்பழங்களை விற்க அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெக்டிப், பினாங்கு வாழ் மக்கள் முதலாம் நடமாட்ட கட்டுப்பாட்டுத் தொடங்கி இன்று வரை மாநில அரசின் கட்டளையைப் பின்பற்றுகின்றனர். இதனால், மாநில அரசு பசுமை மண்டலத்தை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள முடிகிறது. எனவே, இந்த டுரியான் கடைகளிலும் அவர்கள் எஸ்.ஓ.பி-யை பின்பற்றுவர் என ஜெக்டிப் நம்பிக்கைத் தெரிவித்தார்.

கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங் மாநில அரசின் இந்த அனுமதிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இச்சட்டமன்ற தொகுதியில் அதிகமான டுரியான் சிறு தொழில் வியாபாரிகள் இருக்கும் வேளையில் அவர்களின் கோரிக்கைக்கு மாநில அரசு செவிச் சாய்த்தது மாநில அரசின் கடப்பாடு பிரதிபலிக்கிறது என பாராட்டினார்.

பினாங்கு மாநில அரசு கோவிட்-19 நெருக்கடியில் இருந்து தொடர்ந்து மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் திட்டங்களையும் ஆலோசனைகளையும் கையாண்டு வருவதை டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினருமான ஜெக்டிப் சூளுரைத்தார். இதனிடையே, மலேசியாவிலேயே எஸ்.ஓ.பி யை பின்பற்ற தவறிய பொதுச் சந்தை மற்றும் உணவகங்களை மூடிய முதல் மாநிலம் பினாங்கு ஆகும். நிபந்தனைகளை பூர்த்திச் செய்து எஸ்.ஓ.பி-யை பின்பற்றுவதை உறுதியளித்த பின்னர் அத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.