பி.பி.ஆர் வீடுகள் பற்றாக்குறை: காத்திருப்போருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் – சாவ்

img 20260905 wa0060

 

ஜார்ச்டவுன் – “அனைவருக்கும் நியாயமாக இருக்க வேண்டும்” என வலியுறுத்திய பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், மாற்றுக் குடியிருப்புக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கத் தவறியதன் காரணமாகவே பி.பி.ஆர் தாமான் மங்கிஸ் குடியிருப்பில் அண்மையில் ஐந்து வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

 

பொது மக்கள் வீடமைப்புத் திட்டம் (பி.பி.ஆர்) என்பது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் குடியிருப்பு வசதியாகும். குடியிருப்பாளர்கள் தங்களது வாழ்க்கைச் சூழ்நிலையை மேம்படுத்திக் கொண்டு, பொதுவாக ஐந்து ஆண்டுகளுக்குள் வேறு வீடமைப்புக்கு மாற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக சாவ் விளக்கினார்.

எனினும், சில குடியிருப்பாளர்களுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மேல்முறையீடுகள் மற்றும் மனிதாபிமானக் காரணங்களைக் கருத்தில் கொண்டு சிலருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“இந்தத் திட்டம் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், இன்றுவரை சிலர் 19 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இது நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட அதிகமாகும்,” என்றார்.

பி.பி.ஆர் வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பல ஆண்டுகளாக வீடு கிடைக்காமல் காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் வீடுகளை வழங்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு இருப்பதாக சாவ் தெரிவித்தார்.

d4d1f343 1a42 4c53 bc74 70c559e9c082

“எட்டு அல்லது 10 ஆண்டுகளாகக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், ‘எங்களுக்கு வீடு எப்போது கிடைக்கும்?’ என்று கேட்கின்றனர். எனவே, காலியாகும் பி.பி.ஆர் வீடுகள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.

தகுதியை இழந்த சில குடியிருப்பாளர்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைத்துள்ளதாகவும், மேலும் சிலர் கால அவகாசம் கோரி மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அவை சம்பந்தப்பட்ட குழுவினால் பரிசீலிக்கப்படும் என்றும் சாவ் கூறினார்.

எனினும், அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைக்க மறுப்பவர்கள் இறுதியில் அமலாக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒத்துழைப்பு இல்லாதபோது, அமலாக்க நடவடிக்கையைத் தொடர வேண்டியுள்ளது. இதுவே வழக்கமான நடைமுறையாகும்,” என்றார்.

குடியிருப்பாளர்களைத் தண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என்றும், பி.பி.ஆர் வீடுகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்றும் சாவ் வலியுறுத்தினார்.

“தகுதியை இழந்தவர்களின் நலனுக்காக மக்கள் போராடுகிறார்கள் என்றால், பல ஆண்டுகளாக வீடு கிடைக்காமல் காத்திருக்கும் மக்களுக்காக யார் போராடுகிறார்கள் என்பதையும் நாம் கேட்க வேண்டும்.

அனைத்து தரப்பினருக்கும் நாம் நியாயமாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குடியிருப்பாளர்கள் மீது திடீரென நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தங்களது நிலையைச் சீர்செய்துகொள்ள அவர்களுக்கு பலமுறை அறிவிப்புகள் வழங்கப்பட்டதுடன், பல்வேறு வாய்ப்புகளும் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் இறுதியில் வெளியேற்றப்பட்டால், அதற்கு முன்னர் பல ஆண்டுகளாக நீடித்த ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கும். இது கடைசி நடவடிக்கையாகும்,” என்றார்.

மேலும், காலியாகும் வீடுகள் புதிய தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பி.பி.ஆர் என்பது மத்திய அரசின் வீடமைப்புத் திட்டம் என்றும் சாவ் தெளிவுபடுத்தினார். பினாங்கில் தற்போது நான்கு பி.பி.ஆர் திட்டங்கள் உள்ளன. அவை ஜார்ச்டவுனில் உள்ள பி.பி.ஆர்; பட்டர்வொர்த், தாமான் மங்கிஸில் உள்ள பி.பி.ஆர்; தாமான் பாகான் ஜெயா மற்றும் பி.பி.ஆர் மாக் மண்டின், மேலும் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள பி.பி.ஆர் பெர்மாத்தாங் தோக் சுபோ ஆகியவையாகும்.

பி.பி.ஆர் வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கிடைக்கும் வீடுகளைவிட தேவை தொடர்ந்து அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஐந்து குடும்பங்களும் தகுதி அல்லது இடமாற்றம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொண்ட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அடங்குவர். அவர்களில் சிலர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்துள்ள நிலையில், மற்றவர்கள் மேலதிக கால அவகாசம் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.

அந்த ஐந்து குடும்பங்களும் மேல்முறையீடு செய்துள்ளனரா என்பது குறித்த மேலதிக விவரங்களை பினாங்கு வீடமைப்பு வாரியத்திடமிருந்து பெற வேண்டும் என்று சாவ் கூறினார்.

“அமலாக்க நடவடிக்கை என்பது உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கை அல்ல. பல வாய்ப்புகளும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் உள்ளன. ஆனால், வீடுகள் காலி செய்யப்படாவிட்டால், புதிய விண்ணப்பதாரர்களுக்கு அங்கு குடியேறும் வாய்ப்பு எவ்வாறு வழங்க முடியும்?” என்று சாவ் கேள்வி எழுப்பினார்.