மாணவர்களுக்குத் தொழில்துறை பயிற்சி மையங்கள் குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் – சத்தீஸ்

பாகான் டாலாம் – மத்திய அரசு மனிதமூலதன பயிற்சி துறையின் Institut Latihan Jabatan Tenaga Manusia (ILJTM) உதவியுடன் எஸ்.பி.எம் (மலேசிய கல்வி சான்றிதழ்) முடித்த மாணவர்களுக்கு இத்திட்டம் தொடர்பாக அதிகம் விளம்பரப்படுத்த வேண்டும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி தொழில்துறை மையங்கள் மாணவர்களின் சிறந்த தேர்வு எனும் நிகழ்வை தொடங்கி வைத்த பின்னர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இதன் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் சுமார் 70,000 எஸ்.பி.எம் தேர்ச்சி முடித்த மாணவர்கள் தங்களது மேற்கல்வியை தொடர்வதில்லை”, என குறிப்பிட்டார் சத்தீஸ்.

பொதுவாகவே ஐந்தாம் படிவம் முடித்த மாணவர்கள் பெரும்பாலும் தனியார் கல்லூரிகளில் மத்திய அரசு அங்கீகரிக்காத துறைகளில் மேற்கல்வியைத் தொடருகின்றனர். இதனால், கல்வி பருவம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான கல்வி கடன் சுமையைச் சுமப்பதோடு வேலை வாய்ப்பு இன்றி திண்டாடுவதாக சட்டமன்ற உறுப்பினர் தமதுரையில் வலியுறுத்தினார்.

எனவே, அரசு மனிதமூலதன பயிற்சி துறை குறிப்பாக தொழில்துறை பயிற்சி மையங்களை ஐந்தாம் படிவம் முடித்த மாணவர்களுக்கு அதிகமாக விளம்பரம்படுத்த முன்வர வேண்டும். நம் நாட்டில்  பல்வேறு அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தரம் வாய்ந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் தற்போதைய தேவைகளுக்கு பொருத்தமான கல்வி திட்டங்களை வழங்குவதாக வலியுறுத்தினார்.

“இம்மாதிரியான அரசு சார்ந்த பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் ரிம700 மட்டுமே கட்டணமாக செலுத்துகின்றனர்; அதன் பிறகு உள்ள கட்டணங்கள் அனைத்தும் அரசு ஏற்றுக்கொள்ளும்; மேலும், வேலை வாய்ப்புகள் கிடைக்க 90% வாய்ப்புகள் அதிகம் உள்ளது; ஆனால், இச்சலுகைகள் நம் மாணவர்களுக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிப்பதாக சத்தீஸ் தெளிவுப்படுத்தினார்.

தொடர்ந்து,தொழில்துறை மையங்கள் மாணவர்களின் சிறந்த தேர்வு நிகழ்வினில் புக்கிட் மிஞ்ஞா ஜப்பான் தொழிலியல் மையம், தைப்பிங் & கூலிம் உயர் தொழில்நுட்ப பயிற்சி மையம், ஆறுமுகம் பிள்ளை, கெபாலா பத்தாஸ்,கங்கார் & பிறை தொழில்துறை பயிற்சி மையங்கள் என ஏழு மையங்கள் பங்குப்பெற்று அன்று வருகையளித்த அதிகமான மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இந்நிகழ்வினில் செபராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர் குமரன், மனிதமூலதன பயிற்சி துறை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.