வர்த்தகர்கள், அங்காடி வியாபாரிகள் தடுப்பூசி பெற புதிய திட்டம் அறிமுகம் -ரோசாலி

செபராங் ஜெயா – செபராங் பிறை மாநகர் கழகம் (எம்.பி.எஸ்.பி) செபராங் பிறையில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகள்
தடுப்பூசி பெறுவதை உறுதி செய்ய வர்த்தகர்கள் தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் அங்காடி வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

பொதுச் சந்தைகள், காலைச் சந்தைகள், உழவர் சந்தைகள், இரவுச் சந்தைகள், ‘அப் டவுன்’ பஜார்கள் மற்றும் உணவு லாரிகள் போன்ற மையப் புள்ளிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக,
எம்.பி.எஸ்.பி மேயர் டத்தோ ரோசாலி முகமது கூறினார்.


இதன் மூலம், இந்த இடங்கள் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதற்கான மையங்களாக மாறாமல் இருப்பதை தடுக்கவும் முடியும் என்றும் கூறினார்.

கூடுதலாக, இந்த முன்முயற்சியின் மூலம், வர்த்தகர்களுடன் தொடர்புகொள்ளும் போது பொது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். இதனால் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தினசரி வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

“தற்போது, எம்.பி.எஸ்.பி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த, பொருத்தமான தடுப்பூசி தளங்களை வழங்குவது பற்றி கலந்துரையாடல் நடத்தி வருகிறது.

“இத்திட்டத்தின் மூலம் மாநில அரசு மக்கள்தொகையில் பெரியோர்கள் 100 சதவிகிதம் குறைந்தபட்சம் முதல் மருந்தளவு வருகின்ற செப்டம்பர் மாத தொடக்கத்தில் பெற வேண்டும் என்ற இலக்கை துரிதப்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“மேலும், திட்டமிட்டபடி சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடியும்,” என்று அவர் முகநூல் நேரலை வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

ரோசாலியின் கூற்றுப்படி, எம்.பி.எஸ்.பி பதிவுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், செபராங் பிறையில் மொத்தம் 8,706 உரிமம் பெற்ற வர்த்தகர்கள் & அங்காடி வியாபாரிகள் மற்றும் 793 உரிமம் அற்ற வர்த்தகர்கள் உள்ளனர்.

எம்.பி.எஸ்.பி, வணிக உரிமத்தை புதுப்பிக்க அல்லது புதிய உரிமத்திற்கு விண்ணப்பிக்க நிபந்தனைகளில் ஒன்றாக தடுப்பூசி போடுவதற்கான நிபந்தனையை உருவாக்கத் திட்டமிடுகிறது.

“இருப்பினும், இந்த பரிந்துரை இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதனை நடைமுறை படுத்துவதன் மூலம் செபராங் பிறை மக்களின் ஆரோக்கியம் மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய வழி வகுக்கும்,” என்று அவர் கூறினார். இதனிடையே, பினாங்கில் கோவிட்-19 வழக்குகள் தொடர்ந்து அதிகரிப்பதையும் குறித்து வருத்தம் தெரிவித்தார்.

செபராங் பிறை வர்த்தகர்கள் தடுப்பூசி திட்டம் செயல்படுத்த பதிவுசெய்யப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பட்டியலை மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இதன் மூலம்,
இந்த இலக்கு குழுவினருக்கு தடுப்பூசி பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் பதிவுப்பெற விரும்புவோர் Https://qrgo.page.link/vVy6z இணைப்பு மூலம் அல்லது கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.