ஸ்ரீ சிவ முனீஸ்வரர் ஆலய இடமாற்றம் சர்ச்சைக்கு சுமூகமானத் தீர்வு

Admin

ஜாவி – நிபோங் திபால் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ முனீஸ்வரர் ஆலயம் இடமாற்றம் தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வுக்காண பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.

மத்திய அரசின் தென் செபராங் பிறையில் சுங்கை கிரியான் ஆற்றைக் கடக்கும் பாலத்தை மேம்படுத்துதல் மற்றும் ஜாலான் பெர்செகுத்துவான் இருந்து ஜாலான் திரான்ஸ்கிரியான் வரை மேம்பாலம் நிறுவும் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக இந்த ஆலயம் இடம் மாற்றம் காண்கிறது. அச்சாலையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அமல்படுத்தப்படும் இத்திட்டம் இன்னும் ஐந்தாண்டு காலவரையறையில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள
ஸ்ரீ சிவ முனீஸ்வரர் ஆலய இடம்பெயர்க்க மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனினும், இம்மேம்பாட்டுத் திட்டம் காலம் தாமதம் ஏற்படுவதால் பொதுப்பணித் துறையை பிரதிநிதித்து வருகையளித்த சே ஸாபிடி சே அனி இன்னும் இரண்டு வாரத்தில் அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு ஆலய நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, பேராசிரியர் ப.இராமசாமி இரண்டு முறை இந்த ஆலய இடமாற்றப் பிரச்சனையில் தலையிட்டு இதற்கு சுமுகமானத் தீர்வுக் கண்டதற்கு சே ஸாபிடி அவருக்கு நன்றித் தெரிவித்தார்.

“மத்திய அரசு இந்த ஆலயத்தை இடம் மாற்றம் செய்வதற்கு ரிம47,000 இழப்பீட்டு தொகை வழங்கவுள்ளது. முறையான ஆகம விதிகளைப் பின்பற்றி பூஜைகள் மேற்கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் சிறு ஆலயங்கள் உட்பட அனைத்து ஆலயங்களும் புதிய இடத்திற்கு மாற்றப்படும்.

“மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை பினாங்கு இந்து அறப்பணி வாரிய வங்கி கணக்கில் செலுத்தப்படும். பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அறங்காவலராக செயல்பட்டு இந்த ஆலயம் இடமாற்றத்திற்கு ஆதரவு நல்கும்,” என இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் ப.இராமசாமி அந்த ஆலய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இந்த ஆலய விவகாரம் தொடர்பாக பேராசிரியர் இன்று தென் செபராங் பிறை மாவட்ட மற்றும் நில அலுவலக மாவட்ட அதிகாரிக்குக் கடிதம் அனுப்புவதாகக் கூறினார்.

இந்த மேம்பாட்டுத் திட்டத்தில் சீன சவக்கிடங்கு ஒன்றும் இடமாற்றம் காண்பது குறிப்பிடத்தக்கது.

2018-ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கில் இதுவரை ஒரு இந்து ஆலயம் கூட உடைப்படாமல் இருப்பததை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தொடர்ந்து உறுதி செய்து வருவது பாராட்டக்குரியதாகும்.

“பினாங்கில் மேற்கொள்ளப்படும் மத்திய மற்றும் மாநில மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடத்தில் அமைந்துள்ள பல இந்து ஆலயங்கள் சுமூகமான முறையில் மாற்று நிலம் வழங்கப்படுகிறது,” என செபராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.