ஸ்ரீ மாரியம்மன் மண்டபம் புதுப்பொலிவுடன் சமூகப் பயன்பாட்டுக்கு மறுதிறப்பு

img 20260925 wa0038

பாகான் – 30 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஸ்ரீ மாரியம்மன் மண்டபம், பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்குப் பின்னர் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

fb img 1790299605815

பாகான் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் கூறுகையில், மண்டபத்தில் புதிய குளிர்சாதன வசதி, உணவு மற்றும் பொருட்களை மேல்தளத்திற்குக் கொண்டு செல்லும் மின்தூக்கி வசதி, புதிய விளக்குகள், சேதமடைந்த மரப்பகுதிகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
fb img 1790299619815

மண்டபத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் முழுவதும் புதிதாக வண்ணம் பூசப்பட்டதுடன், பொதுமக்களுக்கு மேலும் வசதியான சூழலை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
fb img 1790299610323

மண்டபம் பழுதடைந்திருந்த நிலையில், திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் பெறப்பட்டதாகக் குறிப்பிட்ட குமரன், தேவையான நிதியைத் திரட்டி முழுமையான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ஆதரவும் அனுமதியும் வழங்கிய பினாங்கு மாநில இந்து அறவாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக மொத்தம் சுமார் ரிம800,000 செலவிடப்பட்டதாகக் கூறிய குமரன், பல்வேறு தரப்பினரின் பங்களிப்பு மற்றும் நிதியுதவியால் அறவாரியத்தின் நிதிச்சுமையும் குறைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, MCW Tech சென் பெர்ஹாட் நிறுவனம் மண்டபத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்குத் தேவையான சாயம் மற்றும் பிற பொருட்களை ரிம35,000 மதிப்பில் முழுமையாக நன்கொடையாக வழங்கின.

மேலும், மண்டபம் முழுவதும் சாயம் பூசுவதற்கான தொழிலாளர் செலவாக ரிம28,500 செலவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனுடன், எதிர்காலத்தில் சமூகத்தினருக்கான விளையாட்டு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை நடத்தும் வகையில், மண்டப வளாகத்தில் மூன்று ‘பிக்கிள்பால்’ விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க உதவியவர்களுக்கும், சேதமடைந்த மரப்பகுதிகளை மாற்றுவதற்குத் தேவையான பொருட்களை வழங்கியவர்களுக்கும் குமரன் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத் தலைவர் ஆர்.எஸ்.என் இராயர், மண்டபத்தின் மேம்பாட்டுப் பணிகள் தனிநபரின் முயற்சியால் மட்டும் சாத்தியமானதல்ல என்றும், பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த பங்களிப்பின் மூலம் இப்பணிகள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மண்டபத்தை உருவாக்குவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் பங்களித்த முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பங்களிப்புகளையும் மறந்துவிடக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

“ஒருவரால் மட்டும் எந்தவொரு சாதனையையும் அடைய முடியாது. அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்,” என்றார்.

மண்டபத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒவ்வொரு செலவும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவையான அனுமதிகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின்னரே செலவிடப்பட்டதாக இராயர் தெரிவித்தார்.

மேலும், நிர்வாகம் அல்லது செலவினங்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக தம்மிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததும் தண்ணீர்மலை பகுதியில் புதிய மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் இராயர் தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் மண்டபம் இந்து சமூகத்தினருக்கு மட்டுமன்றி, பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களும் சமூக மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், 2026ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் கல்வி உதவித் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் சிறந்த கல்வித் திறனை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்த பாகான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங், ஸ்ரீ மாரியம்மன் மண்டபத்தை இந்து அறப்பணி வாரிய ஆணையர்களுடன் அதிகாரப்பூர்வமாக மறுதிறப்பு செய்து வைத்தார்.

பல்வேறு நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ள இம்மண்டபம், இனி பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் நற்காரியங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் முழுமையாகப் பயன்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன், பினாங்கு குற்றத் தடுப்பு அறவாரியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன், டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் உள்ளிட்ட இந்து அறப்பணி வாரிய உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத் தலைவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.