Admin

கெபாலா பத்தாஸ் – “ஆசிரியர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் மிகுந்த சவாலானதாக மாறுகின்ற வேளையில், அவர்கள் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் திறனை மேம்படுத்தி தேசிய கல்வி முறையின் குறிகோளுக்கு இணங்க கற்றல் மற்றும் கற்பித்தல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்,” என்று பினாங்கு மாநில அளவிலான ‘கல்வி பாராட்டு’ விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர்கள் எப்போதும், நாட்டை வழிநடத்தும் நடப்பு அரசாங்கத்திற்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் செயல்படும் குழுவாக இருக்க வேண்டும், இதனை ஒவ்வொரு ஆசிரியர்களின் மனதில் விதைக்க முடியும் என்றால், தலைச்சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.

இந்த ஆண்டு ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் ‘மனிதநேய ஆசிரியர் மேன்மைமிகு தலைமுறையின் தூண்டுகோல்’ ஆகும். இது ஆசிரியர் பணியின் கண்ணியத்தை மேம்படுத்தி
தேசிய ஆசிரியர் கல்வியின் தத்துவத்திற்கு ஏற்ப வழிநடத்தத் துணைபுரியும்.

ஆசிரியர்கள் கல்வி மேம்பாட்டுக்கு ஆணிவேராகத் திகழ்வர். மேலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் அதிகாரமளிக்கும் திட்டங்கள் வெற்றிப் பெற முக்கிய பங்கு வகிப்பர்.

மேலும், இந்த ஆண்டுக்கான ஆசிரியர் விருது, தலைமைத்துவ விருது, இயக்குநருக்கான சிறப்பு விருது, பினாங்கு மாநில கல்வி மூத்த ஆசிரியர் விருது மற்றும் பல பிரிவுகள் கீழ் விருதுகள் பெறும் அனைத்து கல்வியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

மேலும், விருதுகள் பெற்ற கல்வியாளர்கள் அனைவரும் கல்வியின் மேம்பாட்டுக்கு அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் மனப்பான்மைக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரம்
வழங்கும் வகையில் இந்த விருதளிப்பு விழாத் திகழ்கிறது.

இது அனைத்து கல்வியாளர்களுக்கும் ஊக்கத்தை வழங்குவதோடு தூண்டுகோளாக அமையும் என்பது மறுப்பதற்கில்லை.

டிஜிட்டல் கல்வி தொழில்நுட்ப ஆசிரியருக்கான விருதை ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் பெற்று தமிழ்ப்பள்ளிக்குப் பெருமைச் சேர்த்தார்.