சி.எம்.ஐ மாநில வருவாயை வலுப்படுத்தி, பினாங்கு அரசுக்கு ரிம54.2 மில்லியன் பங்களிப்பு – முதலமைச்சர்

Admin
whatsapp image 2026 05 14 at 10.09.38

 

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில முதலமைச்சர் வாரியம் (சி.எம்.ஐ), மாநில அரசுக்கு வழங்கும் வருவாய்ப் பங்களிப்பை 2024-ஆம் ஆண்டில் ரிம6.41 மில்லியனிலிருந்து 2025-ஆம் ஆண்டில் ரிம54.2 மில்லியனாகக் கணிசமாக அதிகரித்ததன் மூலம், ஒரு முக்கியப் பொருளாதார பங்களிப்பை நிரூபித்துள்ளது.

இந்தச் சாதனை
போட்டித்தன்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்தப்படும் அரசின் சொத்து மேலாண்மை மற்றும் மேம்பாட்டு உத்தியின் செயல்திறனை பிரதிபலிக்கிறது என்று முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, ஒரு மாநில அரசு சார்ந்த நிறுவனம் (GLC) என்ற வகையில், வாடகை வசூல், குத்தகையை திரும்ப வழங்குதல் ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டுவதிலும், அத்துடன் முக்கிய சொத்துக்களின் மதிப்பை அதிகபட்சமாக்குவதற்காக முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP) முறையைச் செயல்படுத்துவதிலும் சி.எம்.ஐ நேரடிப் பங்களிப்பு வகிக்கிறது.

சுங்கை புயு மாநில சட்டமன்ற உறுப்பினர் பீ சின் தி எழுப்பிய வாய்மொழிக் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, இந்த அணுகுமுறை குறுகிய காலத்தில் மாநில வருவாயை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக மக்களின் நல்வாழ்விற்காக மேலும் மீள்திறன் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான ஒரு நிதி அடித்தளத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர்
15-வது பினாங்கு மாநில சட்டமன்றத்தின் நான்காவது தவணையின் முதல் கூட்டத்தின் இவ்வாறு கூறினார்.

பினாங்கில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்குச் சுமை ஏற்படுத்தாமல், மாநிலத்தின் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகள் குறித்து மேலும் கருத்து தெரிவித்த கொன் இயோவ், மாநில அரசு இன்று ஐந்து முக்கிய உத்திசார் நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார். அவை தற்போதுள்ள வருவாய் வசூல் முறையை மேம்படுத்துதல் மற்றும் நிலுவைகளுக்கு எதிரான அமலாக்கம்; அதிக வருவாய்க்காக உற்பத்தித்திறனற்ற சொத்துக்களை மறுவடிவமைத்தல் அல்லது குத்தகைக்கு விடுதல்.மற்றும் உயர் தொழில்நுட்பம் & நவீன சேவைத் துறைகளில் உத்திசார் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும்.

அதுமட்டுமின்றி, ‘பூஞ்யம் அடிப்படையிலான வரவு செலவுத் திட்டம்’ மற்றும் ஒருங்கிணைந்த நிதி செயல்திறன் கண்காணிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதோடு, திடீர் வரி உயர்வுகள் இல்லாத விவேகமான வருவாய் மாற்று வழிகளையும் தனது நிர்வாகம் தேடி வருவதாக கொன் இயோ கூறினார்.

அதன்பிறகு நடந்த கூடுதல் கேள்வி அமர்வில், நில வங்கிகளின் மேம்பாடு மற்றும் விற்பனை, மற்றும் கடல் மீட்புத் திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்தை நம்பி பினாங்கு மாநில அரசாங்கம் எந்த அளவிற்குத் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை விளக்குமாறு , சட்டமன்ற உறுப்பினர் பீ சின் தி கேட்டுக் கொண்டார்.

மேலும் அக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், நிதி, பொருளாதார மேம்பாடு, நிலம் மற்றும் தகவல் தொடர்பு ஆட்சிக்குழு உறுப்பினரான கொன் இயோவ், தனது நிர்வாகமும் பிற மாநில அரசுகளைப் போன்றதுதான் என்றும், அவை ஒவ்வொன்றும் நிதி நெருக்கடிகளையும், குறைந்த மாநில வருவாயையும் எதிர்கொள்வதாகவும் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், பினாங்கு மாநில அரசாங்கத்திடம் இன்று வரி வருவாய், வரி அல்லாத வருவாய் மற்றும் வருவாய் அல்லாத வரவுகள் உள்ளிட்ட பாரம்பரிய ஆதாரங்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார்.

“உதாரணமாக, இந்த அமர்வில் நாம் விரிவாக விவாதித்த நில வரி, அதாவது மாநில அரசு தற்போதுள்ள நில உரிமைகளிலிருந்து நேரடியாக வரி வசூலிப்பது மற்றும் நிலையான வரியையும் சேர்த்து நாம் வசூலிக்கக்கூடிய தொகை சுமார் ரிம130 மில்லியன் ஆகும்.

“நில வரி மறுஆய்வுக்குப் பிறகு, குறைப்புகள், விலக்குகள், தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் பலவற்றிற்குப் பின்னர், வருவாயில் கூடுதலாக ரிம50 மில்லியன் மட்டுமே கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

“நான் வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன், இந்த நில வளம் தீர்ந்துவிட்டால், இந்த வளத்தை மற்றொரு வளத்தைக் கொண்டு ஈடுசெய்வது நமக்கு ஒரு சவாலாக இருக்கும். ‘எங்களால் தாங்க முடியாத நிலை வரும் வரை’ நாங்கள் சமாளித்துக் கொண்டிருப்போம்,” என்று சாவ் விளக்கமகித்தார்.

இது தொடர்பாக, கூட்டரசு அளவில் வசூலிக்கப்படும் வருவாயைப் பகிர்ந்து கொள்ளுமாறு, நிர்வாகம் மற்ற பல மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கும் என்று மேலும் விளக்கமளித்தார்.

“நமது மாநிலத்தை
வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு தொடர்ந்து மேம்படுத்துவது எவ்வளவு சவாலானது என்பதை மத்திய அரசு பரிசீலித்து ஆராய்ந்து வருகிறது. எனவே, நாம் இன்னும் பாரம்பரிய வருவாய் ஆதாரங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.

“மத்திய அரசுடன் வருவாய் பகிர்வு நடைமுறைக்கு வராத வரை, மாநிலங்களின் குரல்களை கூட்டரசு கேட்கும் வரை நாம் குரலை உயர்த்த வேண்டும்,” என்று அவர் விளக்கமளித்தார்.