சிலம்பத் தனித்திறமைப் பிரிவில் பினாங்கிற்கு வரலாற்றுத் தங்கம்

Admin
img 20260822 wa0199

சிலாங்கூர் – 2026ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டுப் போட்டி (SUKMA) பெண்களுக்கான தனிநபர் சிலம்பம், தனித்திறமைப் பிரிவில் பினாங்கு வீராங்கனை எம்.ஆர் ரினிஷா தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
img 20260822 wa0200

இதன் மூலம், இப்பிரிவில் பினாங்கு மாநிலம் 13 ஆண்டுகளாகக் காத்திருந்த தங்கப் பதக்கக் கனவு நனவாகியுள்ளது.

img 20260822 wa0198
சிலாங்கூரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், 20 வயதான ரினிஷா 8.7 புள்ளிகளைப் பெற்றார். அதேவேளையில், பேராக் மாநில வீராங்கனை பி.லாஷ்மிதாவும் 8.7 புள்ளிகளைப் பெற்று சமநிலையில் இருந்தார்.

இதனையடுத்து, பேராக் தரப்பிலிருந்து ஆட்சேபனை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடுவர் குழு விவாதித்து இரு வீராங்கனைகளுக்கும் தங்கப் பதக்கங்களை வழங்க முடிவு செய்தது.
img 20260822 wa0198

இதன் மூலம், தனது கடைசி சுக்மா போட்டியில் பங்கேற்ற ரினிஷா, பினாங்கு மாநில சிலம்ப வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியைப் பதிவு செய்தார்.

இதுகுறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய ரினிஷா, “இதுவே எனது கடைசி SUKMA போட்டியாகும். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இதே தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றேன். கடைசி போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் கடுமையாகப் பயிற்சி செய்தேன். இன்று அந்த இலக்கு நிறைவேறியுள்ளது,” என்றார்.

img 20260822 wa0201

கோலாலம்பூரில் கல்வி பயின்று வரும் ரினிஷா, தனது படிப்புடன் பினாங்கில் நடைபெறும் சிலம்பப் பயிற்சியையும் சமநிலைப்படுத்தி வந்தார். பயிற்சியில் பங்கேற்பதற்காக அவர் ஒவ்வொரு வாரமும் கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்குப் பயணம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

“இந்தத் தங்கப் பதக்கம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமானது. எனது பயிற்சியாளர், குரு, பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, பினாங்கிற்காக இந்தப் பதக்கத்தை வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது,” என்று ரினிஷா கூறினார்.

தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த குரு ரவீந்திரன், பினாங்கு மாநில விளையாட்டு மன்றம் (MSNPP), அணி மேலாளர் எஸ். குணசீலன், பயிற்சியாளர் ஆர். பிரகாஷ், பெற்றோர், மூத்த சகோதரர் மற்றும் பினாங்கு சிலம்பச் சங்கம் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பயிற்சியாளர் ஆர். பிரகாஷ் கூறுகையில், ரினிஷாவின் நீண்டகால அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதியே இந்தத் தங்கப் பதக்கம், என்றார்.

“மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில், அவரது பயிற்சிக்கான வருகையும் அர்ப்பணிப்பும் மிக உயர்ந்த நிலையில் இருந்தன. கோலாலம்பூரில் பயின்று வந்தாலும், ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்காகப் பினாங்கு வந்து சென்றார். எனவே, இந்தத் தங்கப் பதக்கத்திற்கு அவர் உண்மையிலேயே தகுதியானவர்,” என்றார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தங்கப் பதக்கத்தை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.

இதனிடையே, பினாங்கு சிலம்பச் சங்கத்தின் அணி மேலாளர் எஸ். குணசீலன், ரினிஷாவின் வெற்றியை மாநில அணியின் சுக்மா பயணத்திற்குக் கிடைத்த சிறந்த தொடக்கமாக வர்ணித்தார்.

“போட்டியின் முதல் நாளிலேயே பினாங்கிற்குத் தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது எங்கள் அணிக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக இதைப் பார்க்கிறோம்,” என்றார்.

முந்தைய ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய பேராக் மாநில வீராங்கனையை எதிர்கொண்டபோதிலும், ரினிஷா வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை அணியிடம் இருந்ததாகவும் அவர் கூறினார்.

“ரினிஷா இந்தப் பதக்கத்தை வெல்வார் என்று நாங்கள் முன்கூட்டியே நம்பிக்கை கொண்டிருந்தோம். அவரது போட்டியாளரான பேராக் வீராங்கனை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தங்கப் பதக்கம் வென்றவர். இருப்பினும், ரினிஷா மிகுந்த உறுதியுடன் போராடி வெற்றியைப் பதிவு செய்தார்,” என்று குணசீலன் கூறினார்.

ரினிஷாவின் சாதனை பினாங்கு மாநிலத்திற்குக் கூடுதல் வரலாற்றுச் சிறப்பைக் கொண்டுள்ளது,” என்றார்.

13 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு, பினாங்கு சிலம்ப அணி மீண்டும் சுக்மா தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கொண்டாடியுள்ளது. தனது கடைசி SUKMA போட்டியில் களமிறங்கிய ரினிஷா, பினாங்கு சிலம்ப வரலாற்றில் புதிய மைல்கல்லைப் பதித்துள்ளார்.