நாட்டின் 2016-ஆம் ஆண்டு வரவுச்செலவு திட்டத்தில் பினாங்கு மாநிலம் முடக்கம்- திரு.ஜெக்டிப்

ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ
ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய ஜெக்டிப் சிங் டியோ

அண்மையில் நம் நாட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக் நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவு திட்டத்தைத் தாக்கல் செய்தார். இத்திட்டத்தில் பினாங்கு மாநிலம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தம் சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சாடினார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ. இத்திட்டத்தில் மலிவு விலை வீடுகளின் கடனுதவி வரவுச்செலவு திட்டத்தில் இணைக்கப்படாதது தமக்கு ஏமாற்றம் அளிப்பதாக மேலும் விவரித்தார்.
அதோடு, சம்மந்தப்பட்ட தரப்பினர் வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முதல் முறை வீட்டுக்கடனுதவி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குச் சிறப்பு கடனுதவி கிடைக்க முன்மொழிய வேண்டும். தனக்கென்று ஒரு சொந்த வீடு பெற்றிருப்பது ஒவ்வொரு மனிதனின் கனவாகும். வங்கிகளில் 70% கடனுதவி நிராகரிக்கப்படுகிறது. இப்பிரச்சனைக்குத் தீர்வுக்காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் விவரித்தார்.
இதனிடையே, 1 மலேசியா பராமரிப்பு நிதியம் திட்டத்தில் பினாங்கு மாநிலத்திற்கு முக்கியதுவம் அளிக்கப்படவில்லை. 1 மலேசியா பராமரிப்பு நிதியம் கீழ் பினாங்கில் 119 வீடமைப்புத் திட்டத்தில் மலிவு விலை வீடுகள் மற்றும் நடுத்தர மலிவு விலை வீடுகளை கட்டிதர 2012-ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 14 வீடமைப்புத் திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது என்றார். பினாங்கில் அதிகமான வீடமைப்புத்திட்டங்கள் அவசியம் என்ற போதிலும் இம்மாநிலத்தை நிராகரிப்பது தமக்கு வேதனை அளிப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெக்டிப் சிங் தெரிவித்தார். பினாங்கு மாநில அரசு 2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய மலிவுவிலை வீடமைப்புத் திட்டத்தின் கீழ் தற்போது பன்னிரண்டு வீடமைப்புத் திட்டங்களில் 22,512 வீடுகள் கட்டப்படவுள்ளது பாராட்டக்குறியதாகும்