ஜார்ச்டவுன் – மலேசிய சாதனைப் புத்தகத்தில் புதிய மைல்கல்லைப் பதிக்கும் வகையில், 100 மணி நேரத் தொடர் சிலம்பம் சுழற்றும் நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 வரை பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (USM) நடைபெறவுள்ளது.
பினாங்கு போர் கலை சிலம்பச் சங்கம் (PSPKPP) ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்ச்சி குறித்து சுற்றுலா மற்றும் படைப்பாற்றல் பொருளாதார ஆட்சிக்குழு உறுப்பினர் வோங் ஹோன் வாய் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

2026-ஆம் ஆண்டில் சிலம்பக் கலை பினாங்கு மாநிலப் பாரம்பரியமாக அரசிதழில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்நிகழ்ச்சி வெறும் கலை சார்ந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் ஒரு மகத்தான முயற்சியாகும், என்றார்.
“பினாங்கு, கெடா, பேராக், பெர்லிஸ், திராங்கானு, நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய 9 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
அண்மையில் நிறைவடைந்த சுக்மா (SUKMA) விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் பலர் இதில் தொடர்ந்து கலந்துகொள்வது அவர்களின் ஒழுக்கத்தையும் கலை மீதான பற்றையும் காட்டுகிறது,” என்று வோங் ஹோன் வாய் பாராட்டுத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சங்கத்தின் தலைவரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான மாஸ்டர் கவிக்குமார், கடந்த 2022-ஆம் ஆண்டில் நாங்கள் படைத்த 72 மணி நேர சாதனையை முறியடித்து, இம்முறை 100 மணி நேரப் புதிய சாதனைப் பதிவை மேற்கொள்வதே எங்களது முதன்மை இலக்காகும், எனக் கூறினார்.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி பிற்பகல் 2.00 மணிக்குத் தொடங்கும் இந்தத் தொடர் நிகழ்ச்சி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 6:00 மணி வரை இடைவிடாது நடைபெறும். ஆகஸ்ட் 29 (சனிக்கிழமை) இரவு 8:30 மணிக்கு நடைபெறும் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவில் பினாங்கு மாநில ஆளுநர் (TYT) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.