வணிக வளாகங்கள் மற்றும் பொது வீட்டுவசதிகளுக்கு 4 மாத வாடகை விலக்கு

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநகர் கழகத்தின் (எம்.பி.பி.பி) வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அதன் வணிக வளாகங்கள் மற்றும் பொது வீட்டுவசதிகளுக்கு நான்கு மாத வாடகை விலக்கு அளிக்க ஒப்புக் கொண்டது. இத்திட்டத்திற்காக மாநகர் கழகம் ரிம3,848,000 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது பாராட்டக்குரியதாகும்.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை 1,566 பொது வீடுகள் மற்றும் 5,963 வணிக வளாகங்களுக்கு வாடகை விலக்கு அளிக்கப்பட்டன என மாநகர் கழக உறுப்பினர் வொங் யூயி ஹர்ங் அறிவித்தார்.

“நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (பி.கே.பி), நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) மற்றும் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) ஆகிய நடைமுறை அமலாக்கத்தால் புதிய இயல்புடன் வணிகத்தை வழிநடத்துவதில் மக்களும் வணிகர்களும் நிறைய சவால்களையும் தாக்கத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, மாநில அரசு கடந்த மார்ச்,25 அன்று பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டம் 1.0 மற்றும் பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டம் 2.0 (மே 6, 2020) மூலம் வெளியிட்ட அறிவிப்பில் பினாங்கு மாநகர் கழகம் மக்களின் சுமையைக் குறைக்க விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது என தொலைதொடர்பு மூலம் நடைப்பெற்ற மாநகர் கழகக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

யூய் ஹார்ங்கின் கூறுகையில், பினாங்கு மக்களுக்கான உதவித் திட்டம் 1.0 அறிவிப்பில், மாநில அரசு பொது வீடமைப்பு மற்றும் மக்கள் வீட்டுவசதி திட்டத்திற்கான (பி.பி.ஆர்) ஆகிய இரண்டு மாதங்களுக்கான (ஏப்ரல் மற்றும் மே) மாதாந்திர வாடகை விலக்குகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் உதவித் திட்டம் 2.0-இல் கூடுதல் இரண்டு மாத வாடகை விலக்கு (ஜூன் மற்றும் ஜூலை 2020) வழங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மாநில அரசு மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகள் (பி.பி.தி) பினாங்கு மக்களுக்கான உதவி தொகுப்பு 1.0-இல் வணிக வளாகங்களுக்கு ஒரு மாத (ஏப்ரல்) வாடகை விலக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், மக்களுக்கான உதவித் திட்டம் 2.0-இல் அடுத்த மூன்று மாதங்கள் (மே, ஜூன் மற்றும் ஜூலை) வாடகை விலக்கு வழங்க குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் விவரித்தார்.